Social Icons

Pages

Friday, April 26, 2013

சொல் ஓவியம்!





இலக்கியத்தின் வசந்தகாலம் கவிஞர்களின் பாடல்களில்தான் இருக்கிறது. ஒப்பற்ற  கவிதை என்பது கவிஞனின் படைப்புத்திறனாலே பிறப்பதில்லை உலகம் அதிர்ஷ்டம் செய்ததாலேயே பிறக்கிறது.
     

அந்தவகையில்,ஆங்கிலத்தில் கீட்சும்

தமிழில்கம்பனும் நம்மில்

பெரும்பாலரின் மனதைக் கவர்ந்துவிடுகிறார்கள் !

கீட்ஸ் ஓர் அற்புதக்கவிஞன்!

 வசதி இல்லாத வாழ்க்கை வசீகரமான கற்பனை அற்ப ஆயுள் அற்புதமான சிந்தனை  இதுதான் கீட்ஸ்!  தனது 21 வயதில் கவிதை உலகில் பிரவேசித்து 24வயதில் மரணத்தின் பிடியில் வீழ்ந்தார் நம் பாரதியைவிட குறைந்தகால வாழ்வு தான் இவருக்கு. காதல் நோயும் காசநோயும் கீட்சின் நெஞ்சினைக் கூறுபோட்டுவிட்டன இளமையில் மரணம் அவரை வென்றது.

கவிதை உலகில் இரண்டாம் மறுமலர்ச்சிக்குவித்திட்ட கற்பனைவியல் கவிஞர்கள் வாட்ர்ஸ்வொர்த் கீட்ஸ் ஷெல்லி மூவரும் உலகின் கவனத்தை ஈர்த்தவர்கள்.

அதிகம் கரைத்துக்குடிக்கவில்லை எனினும் கண்டுகளித்தவரை கீட்சும் கம்பனும் அவர்களின் மொழிகளில் சொல்லோவியத்தைக்காட்டி இருக்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது.

சொல் ஓவியம்!

பார்த்தீர்களா. சொல்சிற்பம் சொல் இசை என்று வருகிறதா ஓவியம் என்றே சொல்லின் பெருமைக்கு சிறப்பு சேர்க்கிறது! ஏனென்றால் சித்திரம் நம்மிடம் பேசும்! திரைப்படங்களைக்கூட திரைச்சித்திரங்கள் என்பார்கள் தூய தமிழில்.

ஆம்!..கம்பனும் கீட்சும் ஓவியத்தை தங்கள் பாடல்களில் ஒளித்துவைத்ததை சற்றே பார்க்கலாம்.

ஆயகலைகள் அறுபத்திநான்கு! சிற்பம் ஓவியம் நாட்டியம் எழுத்து பேச்சு, மகிழ்வு ஊட்டும் கருவிகள் என்று பல உண்டு. இவைகளில்  ஓவியம் ஒருதனிச்சிறப்பைப்பெறுகிறது.


குறிப்பாக காதல்நோயில் வீழ்ந்தவர்களுக்கு ஓவியம் ஒருசிறந்த உறுதுணையாக அமைகிறது.

ஆணாயினும். பெண்ணாயினும் தங்களுடைய அன்புக்குரியவர்களின் முகத்தினன நினைத்து,படத்தினைப் பார்த்து மனம் மகிழ்கின்றனர்.

நடைமுறைவாழ்க்கையில் சிறந்தபொருளை நமக்குஒருவர் கொடுக்காவிட்டால் உடனே,' அதென்ன பெரிய ஓவியமோ?' என்று கேட்கிறோம்.

கதைகளில்கூட அவள் அஜந்தாஓவியம்போலிருந்தாள் எனகதாசிரியர்கள் எழுதுவார்கள் அழகுச்சித்திரம், சித்திரம் பேசுதடி,காதல் ஓவியம் என்றெல்லாம் பாடல்களில் கேட்டுவருகிறோம்.

மக்கள்தங்களுக்கென்றுமொழி உருவாகாத காலத்தில் குகைகளில் சித்திரங்களைவரைந்து அதன்மூலம் உணர்ச்சிகளை வெளிபடுத்திக்கொண்டார்கள்.

 உணர்ச்சிபூர்வமான சிறந்தஓவியம் பல கதைகளை நமக்குச்சொல்லிவிடும்.

அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க ஓவியம் ஒன்றினை புலவன் கீட்ஸ் காண்கிறான்

அந்தஓவியம் வரையப்பட்டிருந்தது ஒரு தாளில் அல்ல..குகைச்சுவர்களில் அல்லது மரத்தூண்களில் அல்ல.மாறாக ஒருதாழியில் !(URN)

அந்தத் தாழி,கிரேக்கநாட்டுச் சார்புடையதாக அவனுக்குத் தோன்றியது எனவே அந்தப்பானைக்கு Greecian Urn என்று பெயர்வைத்தான்' அந்ததாழியை வ்ரலாற்று
ஆசிரியனாகவும் (Sylvan Historian)நினைத்து அதனுடன் பேசுகிறான்.

காதலன் காதலிக்கு ஊதுகுழல் ஊதி மகிழ்வித்து அவளைப் பின் தொடர்ந்து தன் அருகில் அழைத்திடுவதுபோன்ற ஓவியம் .

அவன் அழைப்பதை செவிசாய்க்காமல் அவனுடைய இன்னிசையைக்கேட்டு இசைவுகொடுக்காமல் தப்பி ஓட முயற்சி செய்கிறாள் அந்தப்பெண்

ஒருமரத்தடியிலே இந்தக்காதல்நாடகம் நடக்கிறது ,இந்த நிகழ்ச்சியை சித்தரிக்கும் ஓவியம் கீட்சின் சிந்தனையைக் கவர்கிறது.


அந்தஓவியக்காதலனிடம் கீட்ஸ் பேசுகிறான்

"இந்தமரத்தினடியில் நீ எப்போதும் நின்றுகொண்டிருக்கலாம் நீபாடுகின்ற பாட்டினைக் கேட்காமல் அவள் எங்கேயும்தப்பித்துப்போகமுடியாது. இந்தமரங்களும் உன்னுடைய      பாட்டைக் கேட்டுப்  பழக்கப்படவேண்டியதுதான்.

நீ அவளைமுத்தமிடமுயற்சிக்கிறாய் ,ஆனால் முடியாது.

நீ உனதுகுறிக்கோளில் வெற்றிக்குப்பக்கத்தில் நிற்கிறாய், அதற்காகபயப்படாதே !

அவளும் உன்னைவிட்டுமறைந்துவிடமுடியாது. எப்பொழுதும் உனது காதல் இருந்துகொண்டே இருக்கும் அவளும் அழகு மாறாமலே இருப்பாள்'

என்னும்பொருள்பட தாழியிலுள்ளஓவியக் காதலர்களைப்

பார்த்துச்சொல்லுகிறான் கீட்ஸ்.


அமரத்துவம் வாய்ந்தகாதல் ஓவியம் அழியாதது!

அந்தக்காதலர்களுக்கு மூப்புஇல்லை என்பதைகீட்ஸ்மறைமுகமாகசொல்கிறார்..

அதனைக்கீழ்கண்ட ஆங்கிலவரிகள் நமக்கு உணர்த்திவிடும்.


Thou still unravish'd bride of quietness,

Thou foster-child of silence and slow time,

Sylvan historian, who canst thus express

A flowery tale more sweetly than our rhyme:

What leaf-fring'd legend haunts about thy shape

Of deities or mortals, or of both,

In Tempe or the dales of Arcady?

What men or gods are these? What maidens loth?

What mad pursuit? What struggle to escape?

What pipes and timbrels? What wild ecstasy?



Heard melodies are sweet, but those unheard

Are sweeter; therefore, ye soft pipes, play on;

Not to the sensual ear, but, more endear'd,

Pipe to the spirit ditties of no tone:

Fair youth, beneath the trees, thou canst not leave

Thy song, nor ever can those trees be bare;

Bold Lover, never, never canst thou kiss,

Though winning near the goal yet, do not grieve;

She cannot fade, though thou hast not thy bliss,

For ever wilt thou love, and she be fair!

(From "ode on a Grecian urn"by John Keats)



கீட்சின் இந்தவிவரிப்பும்,கம்பனின் காவியத்தில் ஒரு நிகழ்ச்சிகோர்வையையும் பார்த்தால் ஓவியக்கலையின் சிறப்பை நாம் இன்னும் உணரமுடியும்.



ஆற்றமுடியாத துயரத்துடன் அசோகவனத்தில் அன்னை சீதை இருக்கிறாள்.

"இராமன்வருவானா? என்னைமீட்பானா?

என் தலைவன் இராமன் நல்லவன்! பேரழகன்!

ஆமாம்! அரசாட்சியை ஏற்றுக்கொள் என்றபோதும் ராஜ்ஜியம் உனக்குஇல்லை என்றபோதிலும் அவன்முகம் சித்திரத்தில்மலர்ந்த செந்தாமரையாகவே இருந்தது. "

அந்தமுகத்தை எண்ணுகிறாள் சீதை. வறண்டபாலையாய் இருந்த அவள் உள்ளத்தில் வசந்தம் எட்டிப்பார்க்கிறது.


"மெய்த்திருப்பதம் மேவு என்ற போதிலும்

இத்திருத்துறந்து ஏகென்ற போதிலும்

சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை

ஒத்திருந்த முகத்தினை உன்னுவாள்"

கம்பன் காட்டும் இந்த சொல் ஓவியம் இதுதான்!

ஓவியக்கலையின் சிறப்பை மிக நுணுக்கமாக பொதித்துவைக்கிறான் கம்பன் இங்கு,

அரசுரிமையைத்துறந்து காட்டிற்குச்செல்லவேண்டும் என்றுகைகேயிகூறியபோது 'அன்றலர்ந்த தாமரையினை வென்றதம்மா' என்று இராமனின்முகத்தை வர்ணிக்கிறார்.


கைகேயின் சுடு சொல் கேட்டமுகம் அன்றுமலர்ந்த தாமரையாம்.அன்றுமலரும்தாமரைக்கு உயிருண்டு ..நேரமாகிவிட்டால் வாடிவிடும் .

ஆனால் சீதையைப்பற்றி கம்பன்கூறும்போது 'சித்திரத்தில் அலர்ந்ததாமரை' என்கிறார், இராமனின் முகவதனத்தினை!

சித்திரத்தாமரைக்கு அழிவில்லை என்றும் மலர்ந்தே இருக்கும்.

கம்பன்காட்டிய சொல்லோவியத்தையும் தாழியில்வரையப்படிருந்த காதலர்களின் உள்ளப்பாங்கினை கீட்ஸ் நமக்கு உணர்த்தும் உருவகமும் நாம் படித்து மகிழ வேண்டிய சுவையான காட்சிகள் !
கலைகளில்பலபிரிவுகளில் ஓவியம் ஓர் உயர்ந்த இடத்தைபிடிக்கிறது என்பதில் ஐயமே இல்லை.

இதனால்தானோ என்னவோ, கம்பனையும்கீட்சையும் பின்பற்றி கண்ணதாசனும் இப்படிப்பாடினான்?

காலங்களில் அவள் வசந்தம்!
கலைகளிலே அவள் ஓவியம்!







மேலும் படிக்க... "சொல் ஓவியம்!"

Wednesday, April 24, 2013

அண்ணாவரு....

நாவிருவது நிமகா(ga)கி(gi)(நான் இருப்பது உங்களுக்காக)  என்று  பாட்டுப்பாடியே கன்னட  திரை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த  டாக்டர் ராஜ்குமாரின் பிறந்ததினம் இன்று.

 நடிகர் டாக்டர்ராஜ்குமார் வாங்கின  பட்டங்களைக்காணுங்கள்!

(Karnataka Rathna, Kannada Kanteerava, Kala Kausthuba, Rasikara Raja, Padmabhushana, Nata Sarvabhouma, Kentuky colonel, Annavaru, Gana Gandharva, Nithya Noothana Nata Shreshta, Doctorate, etc…)
தவிர   சில விருதுகளும்  இருப்பதாக கன்னட அபிமானிகள் சொல்கிறார்கள்.

கன்னட நடிகர் ராஜ்குமார், 30.7.2000ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தொட்டகாஜனூர் பண்ணை வீட்டில் தங்கியிருந்த போது சந்தன கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டார். 108 நாட்கள் காட்டில் பிணைக்கைதியாக இருந்த ராஜ்குமார், பின்னர் மீட்கப்பட்டார்
 
அவரைக்  கடத்திவைக்கப்பட்டிருந்த நாட்களில் கன்னட நடிகர்கள் பலர் அவர் மீண்டு(ம்) வரும்வரைதாடி வளர்த்தார்கள் அவர் மகன்கள் வீட்டுப்பணியாளர்கள் என பலரும்!
 
ராஜ்குமார் வரும்வரை தாடியை எடுக்கமாட்டோம் இது உறுதி என கூட்டம்போட்டு முழங்கினார்கள்
 
அந்த 108நாட்களும் பெங்களூரில்  அப்பாவித்தமிழர்களின் நிலைமை சற்றே சங்கடமாகவே இருந்தது.
 
காலனியில்  வாக்போகும்போது நானும் என் கணவரும் குடும்பக்கதையை கன்னடத்தில்  பேசிக்கொண்டே போகுமளவு தமிழ் வாசனையை மறக்கவேண்டித்தான் இருந்தது.
 
மகள் பதுங்கிப்பதுங்கி பள்ளியிலிருந்து வந்தாள்.
 
இப்படிக்கன்னடமே கதியென்றாகிப்போனால்  அதை எழுதப்படிகக்கற்றுக்கொண்டேயாகவேண்டும் இல்லாவிட்டால் நம்மை  இங்கிருந்து துரத்தி அடித்து விடுவார்கள் என்ற  முஜாமு*(என் திரு’பதி’தான்):)  முப்பதுநாட்களில் கன்னடம் கற்றுக்கொள்வதெப்படி புக்கைவாங்கிவந்தார்.
 
ஜிலேபியை நினைவுபடுத்திய எழுத்துக்களைக்கண்டாலே என்னவோ ஆயாசமாய்வந்தது,அப்படியும்  10நாளில்  சுமாராக எழுதப்படிக்கக்கற்றுக்கொண்டு மகளிடம் தேர்வு வைக்கச்சொல்லி பாஸ் மார்க் வாங்கினோம்!
 
 தினசரி  ராஜ்குமார் நியூஸ் விறுவிறுப்பாய் போனது.  அவரை மீட்பதற்காக மீசைக்காரரரை நோக்கி இன்னோரு மீசைக்காரர் மேற்கொண்ட பயணம்  சின்னத்திரையின்  சில்வர் வரலாறு!
 
கன்னடத்தோழிகளில் ஒருசிலர் என்னவொ வீரப்பன்  எனக்கு ஒண்ணுவிட்ட சித்தப்பா முறைபோல என்னைக்கடுப்பாய் சில நேரம் பார்ப்பார்கள்.
 
எப்படியோ நட சார்வ பௌம(என்ன அர்த்தம்)  மீட்கப்பட்டார்  நகரமே கொண்டாடியது.
 
 மறுபடி அவர் இறந்த நாளன்று நகரம் அல்லலோலகல்லோலப்பட்டது. டாக்டர்ராஜ்குமார் நடிகர்மட்டுமல்ல
   ஏராள ரசிகபக்தர்களைக்கொண்டவர் பாடகர் தெய்வபக்தி நிறைந்தவர்    எல்லாவற்றிர்க்கும் மேலாய் நல்ல மனிதர் ! .”அண்ணாவரு” என பாசமாய்  பலர் அவரை அழைப்பார்கள்.
 
 இவர் நடித்த பங்காருத மனுஷ்யா(தங்கமான மனிதன்)  ஒருவருஷத்துக்குமேல   ஒரே தியேட்டர்ல ஓடி வசூலில் சாதனை செய்தது.
 
வரா பந்தம்மா குருவார பந்தம்மா! ராயரை நினையம்ம குருராயர நினையம்மா என்று அவர் ரேடியோவில் பாடுவதைக்கேட்டு  எதிர்வீட்டு கன்னட அஜ்ஜி(பாட்டி)  கன்னத்தில் போட்டுக்கொள்வாள் அவ்ளோ பக்திப்பரவசம்!
 
அவருடைய இன்றைய பிறந்த நாள் வைபவம்  எங்கள் காலனியில் நீர் மோர் பானகம் சமேதமாகக்  கொ்ண்டாடப்பட்டது 
 
 சின்ன  ஷாமியானா கட்டி அவசர  மேடை ஒன்று  உருவாக்கி  நடிகரின் திரு உருவப் படத்தை(அப்பாடி என்ன மூக்கு!ஃப்ரேம் உடைஞ்சிடுமோ) மாலையெல்லாம் போட்டு  காலனிப்பிரபலங்கள் சிலரைஇன்ஸ்டண்டாய்  பேச அழைத்தார்கள் .
 
 அதில் அடியேனும்  ஒருத்தி..  (எங்க காலனில நான் பிரபலம் தாங்க:) காக்கைக்குத்தன்..........ஞாபகம் இருக்கில்ல?:) 
 
கஸ்தூரி கன்னடத்தில்  சொல்ப மாட்தாடி முடிச்சேன்... பாரதியை நினைவு கூர்ந்து சொலல்லாம்னா பாரதி கன்னடத்தை  எங்காவது குறிப்பிட்டிருக்காரா என நினைவு்படுத்திப்பார்த்தேன் ஒன்றும் எனக்கு  தெரியவரவில்லை..நான் தவற விட்டிருந்தால்  தயவு செய்து யாரும் அதை எடுத்துச்சொல்லி உதவவும் முன்கூட்டி நன்றி!
 
மேடை ஏறிப் பேசியவர்களுக்கு  மோர் பானகம் தவிர    ஜிலேபி , மிக்சர்  ஃப்ரீ்யாகக்கிடைத்தன!
 

-- *=முன் ஜாக்கிரதை முத்தண்ணா!:)

 
மேலும் படிக்க... "அண்ணாவரு...."

Friday, April 19, 2013

சீதையின் சிரிப்பு!

முன்பு  எப்போதோ நான் எழுதிய  ஆன்மீகக்கட்டுரை(!)
 சக்தி விகடனில் அப்போது  பிரசுரமானதை  வாசிக்காமல் தப்பித்தவர்களுக்காக  இங்கே அளித்துள்ளேன்!  இந்தத்தகவலைஆண்டவன் சுவாமிகள்  உபந்நியாசத்தில் கேட்டேன்).
சிவபெருமான், பிரம்மா மற்றும் தேவர்களும் முனிவர்களும் புடைசூழ, வெகு பிரமாண்டமாக நிகழ்ந்தது சீதா கல்யாணம்! மணமேடையில் ஸ்ரீராமரும் சீதாதேவியும் வீற்றிருக்க... 'மணமக்களுக்கு அன்பளிப்பு தர விருப்பம் உள்ளவர்கள் தரலாம்' என்று அறிவித்தார் வசிஷ்டர்.

 
உடனே பிரம்மா, அட்சமாலையைப் பரிசாக வழங்கினார். தேவர்கள் ஒவ்வொருவரும் தங்களிடம் உள்ள உயர்ந்த செல்வங்களை பரிசளித்தனர்.

 
அப்போது சிவனாரிடம், ''தாங்கள் என்ன தரப்போகிறீர்கள்?'' என்று ஆர்வத்துடன் கேட்டார் வசிஷ்டர்.

 
''புலித் தோலைப் போர்த்திக் கொண்டிருக்கிற என்னிடம் தங்கம், வெள்ளி என்று எதுவும் கிடையாது. உடல் முழுவதும் விபூதி பூசிக் கொண்டிருக்கிறேன். என்னிடம் பரிசை எதிர்பார்க்கலாமா?'' என்றார் சிவனார்!

 
இதற்கு வசிஷ்டர், ''அதெப்படி? கல்யாணத்துக்கு வந்தால், மணமக்களுக்கு ஏதேனும் பரிசு தரத்தானே வேண்டும்?!'' என்றார்.

 
சற்றே யோசித்த சிவபெருமான், ''அப்படியெனில், முப்புரம் எரித்த எனது சிரிப்பை பத்திரமாக வைத்திருக்கிறேன். இது எல்லாவற்றையும் எரிக்க வல்லது. மணமகளுக்கு என் பரிசாக, ஆசீர்வாதமாக இதையே தருகிறேன்'' என்று அருளினார்.

 
உடனே, ''சீதா-ராம கல்யாணத்தில், கைலாசபதியின் ஆசீர்வாதம் - மந்தகாசம்'' என்று அறிவித்தார் வசிஷ்டர்.



 இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டாள் சீதா!

 
இப்படி, சிவனார் தந்த சிரிப்புதான், ஒருமுறை அவளுக்கு பெரிதும் உதவியது.
அசோகவனத்தில் சீதையை சிறைப் படுத்தி வைத்திருந்த போது, சீதை முன் வந்த ராவணன், அவளிடம் 'என் மனைவியாக இரு' என்றான்! உடனே சீதை இந்தச் சிரிப்பை உபயோகப் படுத்தினாள்.
 
விளைவு... அனுமனின் மூலம் லங்கா தகனம் ஆயிற்று. அனுமனும் ருத்ர அம்சத்தினன்தானே?!
 



--(ஸ்ரீராம நவமி பூஜைகள் முடித்து பதிவு அளிக்க தாமதமாகிவிட்டது.  அனைவர்க்கும்  சக்கரவர்த்தித்திருமகனின் சீதாபிராட்டியின் அருள்  கிடைத்து நலமுடன் வாழ  வாழ்த்துகள்!)
மேலும் படிக்க... "சீதையின் சிரிப்பு!"

Thursday, April 18, 2013

ராமர் விட்ட பாணம்!






ஜனகமகாராஜனின் அரசவை.

ராம,லக்ஷ்மணர்களோடு விஸ்வாமித்திரர் அரசவையில் வீற்றிருக்கிறார்.

அப்போது அந்த வில் வண்டி வருகிறது, ஆம் சிவதனுசு எனும் அசாத்தியப்பெருமைகொண்ட வில் அது!

எட்டு சக்கரம் கொண்ட வண்டியில் அதனை வைத்து,


'உறுவலி யானையை ஒத்த மேனியர்
செறிமயிர்க்கலெனத்திரண்ட தோளினர்'

எனக்கம்பன் வர்ணிக்கும் பலசாலியானவர்கள் இழுத்துக்கொண்டுவருகின்றனர்.

சபைமுழுவதும் ஆர்வமாய் காத்திருக்கிறது. வேடிக்கைபார்க்க மக்கள் எல்லாம் அங்கும் இங்குமாய் கூடி அமர்ந்திருக்கிறார்கள்.

"என்ன வில் இது !ஆகாசத்தைத் தொடுவதுபோல இப்படி கம்பீரமாய் இருக்கிறதே!"

என்று பேசிவியக்கிறார்கள்.

திண்நெடு மேருவைத்திரட்டிற்றோ.....மேருமலைத்திரட்டி இந்தவில்லைப்பண்ணினார்களா?

வண்ண வான்கடல் பண்டுகடைந்த மத்தென்பர்......கடலில் மந்தரமலையைக்கடைந்த அந்தமலையே திரும்பவும் வந்துவிட்டதா?

அண்ணல் வாள் அரவினுக்கு அரசனோ?.........பாம்புக்கெல்லாம் அரசனாக இருக்குமோ?

விண் இரு நெடிய வில் வீழ்ந்ததோ?..... வானவில் என்று சொல்வார்களே அதுதான் கீழே வீழ்ந்து இவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்கிறதா?


'என், "இது கொணர்க" என, இயம்பினான்?' என்பார்;
'மன்னவர் உளர்கொலோ மதி கெட்டார்?' என்பார்;
'முன்னை ஊழ் வினையினால் முடிக்கில் ஆம்' என்பார்;
'கன்னியும் இச் சிலை காணுமோ?' என்பார். ’



கம்பர் அழகாக வர்ணனை செய்திருப்பதைக்கவனியுங்கள்

"என்ன இது எதுக்கு இதைக்கொண்டுவந்திருக்காங்க எப்படி இதைப்போய் வளைக்கமுடியும் அரசனுக்கு புத்தி கெட்டுப்போய்விட்டதா?"என ஒருவரைஒருவர் பார்த்துப்பேசிக்கொள்கிறார்களாம்.


இப்படி அனைவரும் பார்த்து பிரமிக்கும் வில்லை வளைப்பவனுக்குத்தான் மகளைத்திருமணம் செய்துகொடுப்பதாய் ஜனகன் முடிவெடுத்ததற்குக் காரணம் இருக்கிறது..


சீதை ஒருநாள் அம்மானை ஆடினாளாம்.முணுகாயைவைத்துக்கொண்டு அதுகீழே விழாமல் ஆடுவது அம்மானை எனும் ஓர் பெண்கள் விளையாட்டு.. ஆடும்போது ஒருகாய் கீழே விழவும் அது , சிவதனுசு வைக்கப்படிருந்த பெட்டிக்குக்கீழே உருண்டு ஓடிப்போனதாம்.

இதை ஜனகர் பார்த்துக்கொண்டே இருந்தாராம்.சீதை அடுத்தகணமே தன் இடதுகையால் அந்தப்பெட்டியை சற்றும் சிரமமின்றி அனாயாசமாய் நகர்த்திவிட்டு அமமானையைக் குனிந்து பொறுக்கிக்கொண்டாளாம். மலையைத்தூக்கிவைக்கும் வலிமைகொண்ட தன் மகளுக்கு அப்போதே எப்படிப்பட்ட மாப்பிளையைப்பார்க்கவேண்டுமென ஜனகர் தீர்மானித்துவிடுகிறார்.அதனால்தான் சிவதனுசை யார் எடுத்து வளைக்கிறார்களோ அவருக்கே என்மகளை மாலையிடச்செய்வேன் என்று நினைத்துக்கொள்கிறார்.

இப்போது வில் சபை நடுவில் வீற்றிருக்கிறது.

ராமன் உட்கார்ந்திருக்கும் விதத்தைப்பார்த்தால் அவன் எடுத்து முறித்துவிடுவான்போல இருக்கிறதாம்..ஏற்கனவே  தாடகையை வதம் செய்திருக்கிறதே ராமனின் சொல்லொக்கும் கடியவேகச் சுடுசரம்?


‘வந்தெதிர்ந்த  தாடகை தன் உரத்தைக்கீறி வரு குருதிப்பொழிதர வன் கணையொன்று ஏவி’ என்கிறார் குலசேகர ஆழ்வார்.

இன்றும்  பாலபருவத்தினர் விளையாட்டாய் சொல்கிறார்களே  ‘ராமர்விட்ட பாணம்  திரும்பிப்பார்த்தா  காணோம்’ என்று?!

ராமர் விட்ட பாணம் எப்படி இருக்கும் என்று கேட்டால் எப்படி பேசின மாத்திரத்தில் சொல் செவியில் போய் விழுகிறதோ அப்படி  ஒரு கடையவேகச்சுடுசரமாம்! அதுவும்  வயிரக்குன்ற கல்லொக்கும் தாடகையின் நெஞ்சைத்துளைத்து அப்பால் போனதாம்  . அது கல்லா புல்லார்க்கு நல்லோர் சொன்ன பொருள் எனப்போயிற்றன்னே  என்கிறார் கம்பன்.   நல்லோர்கள்  புல்போன்ற அற்பர்களுக்கு  சொன்ன வார்த்தைகள்  அவர்களின் ஒரு செவி வழி சென்று மறு செவி வழியே  வெளியேறுவது போலவாம்!
 
 

இப்போது ராமர்  சிவதனுசுவை  எடுக்கிறார்.
 
தடுத்து இமையாமல் இருந்தவர் தாளில்
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார்;
கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்!
 
அவ்வளவுதான்!  ராமனின் மாண்பை கம்பர்  ஒரே  வரியில் சொல்லிவிட்டார்  பாருங்கள்!   கையால்  எடுத்ததைத்தான் பார்த்தார்களாம் அடுத்த நொடி என்றெல்லாம்  கூட இல்லை உடனேயே  என்பதற்கான  அவகாசமும் இல்லை வில்லை எடுத்தான்  முறித்தான் என்கிறார்!
 
கம்பனின் கடைசிவரியைக்கண்ணால் பருகுவோம் காதால் பருகுவோம்!
 
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்!
 
(நாளை ராமநவமித்திருநாளைக்குப்புதிய பதிவுடன் சந்திப்போம்)
மேலும் படிக்க... "ராமர் விட்ட பாணம்!"

Wednesday, April 17, 2013

கைவண்ணம் அங்கு கண்டேன்!



இரு பெரும் இதிகாசங்கள் காலத்தால் அழியாதவைகள். அவை மகாபாரதம், ராமாயணம் என்பது அனைவரும் அறிந்ததே.

 பாரதம் பாகவதம்  ராமாயணம்  என மூன்றில்  ராமாயணம் எப்படி என்பதை கம்பன் சொல்கிறான் பாருங்கள்.

வாங்கரும் பாதம் நான்கும் வகுத்த வால்மீகி என்பான்
தீங்கவி செவிகளாரத் தேவரும் பருகச்செய்தான்..’

நான்கு பாதங்கள் ஒரு ஸ்லோகத்திற்கு. வரிகள் .பாதத்தை அடி என தமிழில் சொல்வோம். இப்படி 24000 ஸ்லோகம் செய்துள்ளார் வால்மீகி.
அவர் வகுத்துள்ள நான்குபாதத்தில் ஒரு பாதத்தைக்கூட வாங்கமுடியாதாம் அதாவது வேற சேர்க்கமுடியாதாம். வால்மீகி ஸ்டைல் நான்கு பாதங்களிலும் தெரியும்.  அப்படியான  வால்மீகி’ தீங்கனி செவிகளாரத் தேவரும் பருகச்செய்தான்’ அதாவது தேவர்கள் கூட அம்ருதபானம் பண்ணும்படியாக கேட்டு ஆனந்திக்கும்படியாக  பண்ணி உள்ளாராம்  அவ்வளவு மதுரமான கவிதைகள் அவை.


அண்ணலும் அன்னையும்  ராமனாய் சீதையாய் அவதரித்து  மனிதர்களுக்கு நல்லது கெட்டதை  எல்லோர் மனத்திலும் படும்படி தாங்களே அதை அனுபவித்துக்காட்ட நினைத்தனர்.


மாதாவை  தெய்வமாக நினை தந்தைக்கு தொண்டு செய் இதர நற்பணிகள் எல்லாம் செய்   என்கிறது வேதம். வேத நாயகரே பெருமாள்!அவருக்கு மாதா பிதா உண்டா என்ன?:)  இருக்கிறவர் சொன்னால் தான் கேட்கிறவர்கள் ஒத்துக்கொள்வார்கள்.

அதனால் ராமனாக அவதரித்து  சொன்ன சொற்படி நடந்துகாட்ட நினைத்தார் அண்ணல்.


‘துயரில் சுடரொளி தன்னுடைச் சோதி நின்றவண்ணம் நிற்கவே
துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண்காணவந்து...
துயரங்கள் செய்து தம் தெய்வ நிலையுலகில் புகவுய்க்கும் அம்மான்
துயரமில் சீர்க்கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஒரு துன்பமிலனே...’

என்கிறது திருவாய்மொழிப்பாசுரம்.

துயரில் மலியும் மனிதப்பிறவியில்  விலைகொடுக்காமல் தானே வருவது துக்கம்தான்.

ஆழ்வாரின் இந்தப்பாசுரத்தில் ஒவ்வொரு வரியும்  சிறப்பு.

‘துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றி..’ என்கிறார் பாருங்கள். பிறப்பதற்கும் தோன்றுவதர்க்கும்  வித்தியாசம் உண்டல்லவா?

ஆம் இந்த துக்கம் மிகுந்த மனிதப்பிறவியில் தோன்றி இந்த துக்கம் மலிந்ததான  மனிதர்பிறவியில்  தனது ரூபத்தைக்காண்பித்தான்.

‘தோன்றிக்கண் காணவந்து,,’ அன்பு இல்லாதவர்களுக்குக்காண முடியாது அன்பு உள்ளவர்களுக்கே காணும்படியாக வந்தான்.

தன் தெய்வநிலை உலகில் புகவுய்கும் அம்மான்.... தன் தெய்வ நிலை  உலகத்தார்க்கு வரும்படியாகச்செய்யும் அவதார சிறப்பு  ராமாவதார சிறப்பு.

ராமாயணம் கேட்டவர்களுள் குலசேகர ஆழ்வார் போலக்கேட்டோர் யாருமில்லை.
அப்படி ஆழ்ந்துகேட்பாராம்.. இந்திரன் தேவலோகமிருந்து வந்து அம்ருதம் தருகிறேன் ஆழ்வார்பெருமகனாரே  என்றானாம். ‘வேண்டாம் இன்னமுதம் மதியோம்’ என்றாராம்.

..,...
எம் பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் 
இன்னமுதம் மதியோம் இன்றே..”


நாமும்   ராமசரிதையை  கண்ணால்  பருகுவோமா?

ராமஜெயம் ஸ்ரீ  ராமஜெயம்!

(நாளைமறுநாள் வரும் ராமநவமியை முன்னிட்டு  இன்றிலிருந்து  சில நாட்கள்  ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையை  அவன் அடியார்கள் வாயிலாக அறிந்துகொள்வோம்)

 
மேலும் படிக்க... "கைவண்ணம் அங்கு கண்டேன்!"

Tuesday, April 16, 2013

தொட்டிச்செடி

                                                                                                 
                                   






கொட்டும் மழையில்

ஒருநாள் கிடப்பேன்

கொளுத்தும் வெய்யிலில்

மறுநாள் கிடப்பேன்.





கூண்டுக் கிளிக்காவது

சீட்டு எடுக்கும்போது

சில நிமிட விடுதலை.

தொட்டிச் செடிக்கு

அப்படி எதுவுமில்லை.



வேர்க் கால்களை

வீசி நடக்க

வேறு பாதை ஏதுமில்லை.



வேடிக்கை காண வரும்

விந்தை மனிதர்களைப்

பார்த்தபடியும்

மேய்ந்துவரும் மாடுகளிடம்

என்னில் பாதியை

இழப்பதுவுமே

வாடிக்கையாகிவிட்டது.



அலையும் மனதிற்கு

ஆதரவாய் அருகில்

கிளைக்கரம் தொட்டு

ஆறுதல் சாமரம் வீச

மரம் செடி எதுவுமில்லை.



தொட்டிக்குள் அடங்கிவிட்டது,

என் உடல் மட்டுமல்ல

விடுதலை கிடைக்குமென்ற

வாழ்க்கைக் கனவுகளும்தான்

மேலும் படிக்க... "தொட்டிச்செடி"

Sunday, April 14, 2013

நல்லதோர் ஆரம்பம்!

கம்பராமாயண  வாசிப்பு ,அதுவும் வீட்டருகே!
 
விஷயம் கேள்விப்பட்டதும் கட்டுத்தறி ஒன்று கவிகேட்கத்தயாரானது.
 
 
 
 
திருவரங்கம் கோயிலின் வடபகுதியில் வசிப்பவர்களுக்கு மாலைநேர மெரீனா  என்றால் அது கம்பமண்டப வளாகம்தான். மேட்டழகிய சிங்கர் கோவில் படிக்கட்டுகளில் ஓடுவதும் கம்பர் ராமாயணம் அரங்கேற்றிய அந்த நாலுகால்  கல்மண்டபத்தைச்சுற்றி வந்து  ஓடிபிடித்து விளையாடுவதுமாக  அப்போதே   உணர்ந்த கம்ப மண்டப கல் வாசனையின்  தொடர்போ  என்னவோ  இப்போது இந்த பாக்கியம்!
 
 
அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில பாடல்களை மட்டுமே சொற்பொழிவுகளிலும்  வாசித்ததிலும்  அறிந்துகொண்டிருந்த ஆர்வம் பேரார்வமாய்ப்பெருக ஆரம்பித்தது.
 
இப்படி ஒரு நற்செயலை நிகழ்த்தக்காரணகர்த்தாவாய் இருக்கும் சொக்கனுக்கு போன் செய்து நான் வருவதை உறுதி செய்தேன்.
 
 
அப்படியே  எங்களுக்கெல்லாம் கம்பரசம் வழங்க இருக்கும்  கண்ணபிரான் பேர் கொண்ட ஹரி கிருஷ்ணன் அவர்களுக்கும் போன் செய்து மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டேன். அவரும்
உற்சாகக்குரலில்  தன புறப்பட்டுவரத்  தயாராய்  இருப்பதை தெரிவித்தார்.
 
 
சித்திரைக்கென்றே வரும்  சிறப்புக்கனல் கதிர்களை  நேற்று மாலைக்கதிரவன்  சிக்கனமின்றி வாரி வழங்கிக்கொண்டிருந்தான். அதைப்பற்றிய கவலையின்றி கம்பவெள்ளத்தில் மூழ்க  தயாராகி  பத்து நிமிடம் முன்னதாகவே சொக்கன் அவர்களின் ஐடி  காரியாலய கட்டிட வளாகத்தில் புகுந்துவிட்டேன்.  வாசலில் கிரானைட் படிக்கட்டில்  போய் நின்றேன்
 
.'யார் நீங்கள்?  யாரைப்பார்க்கணும் இன்று ஆபீஸ் லீவு” என்றார்
மாநிலமொழியில்  காவலர். ஆகாய நீல சீருடையில் அமைதி  தவழும் முகத்திலிருந்தார்.
 
 
“சொக்கன் என்பவர் வரசொல்லி இருக்கிறார் அவர் இங்குதான் பணிபுரிகிறார் ” என்றேன்.
 
 
“சொக்கன்? அந்தபேர்ல  யாரும் கிடையாதே?” என்று சந்தேகமாய் கேட்டபடி கண்ணாடிக்கதவைத்தள்ளிக்கொண்டு  உள்ளே போய்விட்டார்.
 
 
நான் சற்று கவலையுடன் சொக்கனுக்கு போன் செய்ய அவரோ,”உங்களை நான்  பார்த்துவிட்டேன் . எதிர் திசையில்  பைக்கில் நான் ஹரியண்ணாவோடு இருக்கிறேன் வண்டியை யு டர்ன் அடித்து மூன்று நிமிஷத்தில் அங்கே வந்துவிடுவேன்” என அபயம் அளித்தார்.
 
அப்போது  வாசல்வழியாக ஒரு ஆள் என்னையே பார்த்துக்கொண்டு வந்தான்  எனக்கு அந்த ஆளின் பார்வை ஏதொ சந்தேகத்தை உண்டாக்கியது. 
 
 திருடனா, கேடியா என யோசிக்கும்போது அவன் என் அருகில் வந்து ஹிந்தியில்”யார் நீங்க எதுக்கு இங்க கம்பெனி வாசல் கதவுகிட்ட நிக்கறீங்க? எனக்கு உண்மையை சொல்லுங்க’என்று அதட்டினான்.
 
 
அதற்குள் கண்ணாடிக்கதவைத்திறந்து உள்ளிருந்து வந்த சீருடைக்காவலர் ஹிந்தியில்“ அதையேதான்   நானும்  கேட்டேன் ஏதோ  பேர் சொல்றாங்க .ஆமா  நீ இன்னிக்கு அபீஸ் லீவுன்னு யூனிஃபார்ம்ல வரலையா  டீக் ஹை” என்று சொல்லி சிக்கனமாய் சிரித்தார்
 
 
இதென்னடா வம்பாய் போச்சு நம்மைப்பார்த்தால் ஏதும் சந்தேகப்படும் நபர் போலவா இருக்கு  இத்தனைக்கும் வெய்யிலுக்கு இதமாய் கூலிங் கிளாஸ் கூட போட்டுவரவில்லை அப்புறம் என்ன  இப்படி  என்னும் கவலையில் கைப்பையை  வரட் வரட் என விரல்நகத்தால் தேய்த்துக்கொண்டிருக்கையில்  சொக்கனின் பைக் சொகுசாய் உள்ளே நுழைய அவரது புன்னகை என்னை நோக்கி வருவதைக்கண்ட காவலாளர்கள்   (அதட்டல் ஆத்மீயும்) அசடு வழிந்தார்கள்.
 
(அப்புறம் தான் தெரிந்த்து சொக்கனின் இயர்பெயர்  அது அல்ல என்று)
 
ஹரிகிஜீ  முகத்தில்  25கிமீ வெய்யிலில்  பயணம் செய்துவந்த களைப்பே தெரியவில்லை  பாரதி கம்பன் என்றால் எனக்கு  பாலைவன வெய்யிலும்  சோலைவனத்தென்றல்தான் என்பதுபோல அப்படி ஒரு கனிவும் களிப்பும் அவர் முகத்தில்.
 
மூவரும் அந்த அலுவலகக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் குளிர்சாதனம் கொண்ட  அறையில் நுழைந்தோம்.
 
பிறகு  சில நிமிடங்களில் ஒவ்வொருவராக  வந்தனர்  சரியாய் 6மணிக்கு  காகிதக்கோப்பையில் பழரசம் அருந்தியபடியே கம்பகாவிய அறிமுக சொற்பொழிவு ஆரம்பமானது.
 
 
15பேர்களுக்கு மேல் கூடி இருந்தோம்.
 
ராமாயணம் என்றால் ஜடாயு இல்லாமலா  ஐந்து நிமிடங்கள் கடந்தபின் அவர் நுழையவும்   “அதானே ராமாயணத்தில்ஜடாயுவின் வருகை முதலில் கிடையாதே” என்று  உரிமையாய்  கிண்டல் அடித்ததை  ரசித்துசிரித்தார்.
 
முதல் நிகழ்வு என்பதே  தெரியாமல்  சரளமாக   நடந்தது வாசிப்பு அனுபவம் அனைவருக்கும் கிடைத்தது.  சாற்று கவி  என கம்பனைப்புகழ்ந்து மற்றோர் எழுதிய பாடல்கள் வாசிகக்ப்பட்டன.
 
அஞ்சிலே ஒன்று பெற்றான் பாடலும் அதில் அடக்கம்.
பாடல்களினூடே  சில சொற்களுக்கு  ஹரிகிஜீ நல்ல  விளக்கம் அளித்தார்.
 
ராமகாவியத்தில்  இரண்டு  இடங்கள் அதாவது பலருக்கு இன்னமும்   வாலி வதம் மற்றும் அக்னிபிரவேசம்  அதனைப்பற்றி அந்தப்படலங்கள் வரும்போது விரிவாய்ப்பேசுவோம் என்றார்.
 
ஜடாயு அவர்களும் பதம் பிரித்து பாடல்களை  அழகுற வாசித்தார் .
அதிகம் தமிழ்தெரியாது  இப்போதுதான் கற்றுவருகிறேன் ஆனாலும் கம்பனைப்பிடிக்கும் ஆகவே வந்தேன் என்ற இரு இளைஞர்களின் மனம் திறந்த   பேச்சு  அவரவர் அறிமுக உரையில்  பளிச்சிட்டது.
 
செவிக்குணவு  நிறைவாக  முடிந்தது
 
சக்கரைப்பொங்கலும் சுண்டலும்  சொக்கன்வீட்டிலிருந்து  வயிற்றுச்சுவைக்கு வந்திருந்தது.
 
செவியும் வயிறும் நிறைந்த மகிழ்வில்  அனைவரும் அடுத்தவாரம் சந்திக்கும் முன் விடைபெற்றுக்கொள்வோம் எனக்கூறி பிரிந்தோம்.
 
 
நல்லதொரு  நிகழ்வினிற்கு வித்திட்டுள்ள சொக்கனுக்கு நன்றி அதனை ஏற்று  மகிழ்ச்சியுடன் கம்பனைக்கண்முன் காட்டப்போகும் திரு ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கு  எல்லார் சார்பிலும் நன்றி  .
 
அடுத்த  வாசிப்பு  வரும் சனிகிழமை  மாலை 5மணிக்கு அதே இடம்  பெங்களூர் தமிழ் அன்பர்கள்  வரலாமே!
 
 
மேலும் படிக்க... "நல்லதோர் ஆரம்பம்!"

Saturday, April 06, 2013

உவெசாவின் ஆசான்!





கோபால கிருஷ்ண பாரதி, தான் எழுதிய  நந்தன் சரித்திரம் என்னும் நூலிற்கு பிரபலமான ஒருவரிடம் வாழ்த்துபெற நினைத்தார். அதற்காக  மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களைத்தேடிச்சென்றார்.

 
நந்தன் சரிதத்திலிருந்து   ஒரு கீர்த்தனையை  பாடிக்காண்பித்தார்.. மஹா பண்டிதரான பிள்ளையவர்களுக்கு அக்கீர்த்தனை பாமரத்தனமாகப்பட்டது. இலக்கண சுத்தமாக     இல்லாததால்      வாழ்த்து தர தயங்கினார்.
 
தொடர்ந்து சிலதினங்கள்  இப்படியே பிள்ளையவர்களைப்பார்க்கவருவதும் வெறும்கையுடன் திரும்புவதுமாக  இருந்தார் பாரதி. ஒருநாள்-அன்றுபிரதோஷதினமென்பதால்- விரதம் மேற்கொண்டிருந்த பிள்ளையவர்கள்  வழக்கம்போல’பிறகு பார்க்கலாம்’ என்று சொல்லித்திருப்பி அனுப்பிவிட்டார்.
 
 
கோபால கிருஷ்ணபாரதி  அந்தவீட்டுத்திண்ணையில் அமர்ந்துகொண்டார். களைப்பு தீரும் வரையில் நந்தனார் சரிதத்திலிருந்து சிலகீர்த்தனைகளைப்பாடியபடியே இருந்தார்.
தன்யாசி ராகத்தில்’ கனகசபாபதி தரிசனம் ஒருநாள் கண்டால் கலி தீருமே’என்று மனமுருகப்பாடினார் பாரதி.
 
உள்ளே இருந்து அதைக்கேட்டுக்கொண்டிருந்த  பிள்ளையவர்கள்,”யாரது வெளியே பாடுவது?’ எனக்கேட்டார்.
அவரது சீடர்கள் அதற்கு,” தாங்கள் திருப்பி அனுப்பிய கோபால கிருஷ்ணபாரதிதான் பாடிக்கொண்டிருக்கிறார்” என்றதும் திகைத்தவர்,”அவரை உள்ளே அழைத்து வாருங்கள்” என்றார்.
 
வந்தவரிடம் பிள்ளையவர்கள் நெகிழ்ந்தகுரலில்,” என் தமிழில்  இலக்கணம் இருக்கிறது, ஆனால் உன் தமிழில் இறைவனே இருக்கிறான்” எனச்சொல்லி உடனே  ஒரு வாழ்த்துக்கவிதையும் வழங்கினார்.
 
தமிழ்த்தாத்தா  உவேசா அவர்கள்
 
 
 தனது  இளம்வயதிலேயே

 
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவரிடமும் பயின்று தமிழ் அறிஞர் ஆனார். மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவருக்கு சாமிநாதன் என்று பெயரிட்டார்.எனவே   அவருக்கு  உ.வே.சா என்றப் பெயர்  ஏற்பட்டது.

      இன்று மகாவித்வான் அவர்களின் பிறந்த நாள்!(  ஆசான் படம் கிடைக்கவில்லை சீடர் படம்  மட்டும் கிடைத்ததை அளித்துள்ளேன்)

இன்று திரு பார்த்தசாரதி அவர்களால் மகாவித்வானின் படம் கிடைக்கப்பெற்றது இணைத்துள்ளேன் நன்றி  பார்த்தசாரதி அவர்களே!
மேலும் படிக்க... "உவெசாவின் ஆசான்!"

Monday, April 01, 2013

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே:)


-- ஃபிரிட்ஜில்  மோதிரத்தையும்  வார்ட்ரோபில் தக்காளிப்பழத்தையும் வைக்கும் போதே நினைத்தேன் நமக்கும்  ஞாபகமறதி வந்துவிட்டதென்று
 
எங்க  பெரியம்மாக்கு இப்படித்தான்   Alzheimer   வந்து  தான் யார் என்ன என்ற நினைவில்லாமல் எங்காவது  போயிடுவாங்க” என்று   வீடுவந்த  சுடோகு சுமதி பயமுறுத்தினாள்.
 
 
‘அடப்பாவி அல்சைமர்    இல்லை எனக்கு! லேசா  மறதி அப்பப்போதான் , அடிக்கடி இல்லை” என்று சத்தியம் செய்தபிறகே அவள் நம்பினமாதிரி தெரிந்தது.
 
உன்கிட்டபோ புலம்பினேன் பாரு  போடி போ உன் சுடோக்குவைக்கட்டிட்டு அழு’ என்று மனதுக்குள் சொல்லியபடி  அவளை அனுப்பிவைத்தேன் 
 
செலக்டிவ் அம்னீஷ்யாவா என்ன  என்று   அதுபற்றி நெட்டில் பலர் சுட்டுப்போடதைப்படித்து  சேசே அது இல்லை என  உணர்ந்துகொண்டேன்
 
 
ஊரிலிருந்து வந்த என் உடன்பிறப்பிடம்,”என்னன்னு தெரியலடா  ஞாபக மரதில  வரவர கதை கவிதைன்னு எழுத முடியல இலக்கிய சேவையே  செய்யமுடியல” என்றதும்  “அட எழுதமுடியலையா? இதைவிட  நீ என்ன  இலக்கிய சேவை செய்யனும்?” என்று கேட்டு என்னிடம்  ஸ்கேலில் அடிவாங்கிக்கொண்டான்!
 
“அதென்னவோ  பழசெல்லாம் பளிச்சுனு  டெலிவரி பார்த்த  நர்ஸ்முகம் வரை நினைவிருக்கு இப்ப நடந்தது மறந்துபோகுது”
 
இப்ப நான் கொடுத்த முப்பது லட்சத்தை திருப்பிக்கொடுக்கா என்றது உடன்பிறப்பு.
 
அது நீ கொடுத்ததும் பழசாகிவிட்டது   பழைய நினைவில் அப்படி ஒரு அசம்பாவிதமே நடக்கவில்லையப்பா!
 
“சேம் ப்ராப்ளம் எனக்கும்!”  மால் போனபோது எக்சேஞ்ச் கவுண்டரில் நின்றுகொண்டிருந்த    ஸ்யாமளாவை பெருமையாய் பார்த்தேன் இனம் இனமறிகிறதே பலே!
 
“  எல்லாம் வயசாறதில்லையா?” என்ற வசனம்  வீசியவளை மேற்கொண்டு பேசவிடாமல்  கடந்துவிட்டேன். இதுக்கெல்லாம்  என்ன வயசு?:) எனக்கு அஞ்சு வயசிலேயே  ஞாபக மறதி வந்திருக்கு  அப்பா ஒருதடவை” எங்கம்மா  இந்த மாசத்து  ப்ராக்ரஸ் ரிபோர்ட் ?”என்று கேட்டதும்தான் ”மரந்துட்டேன்ப்பா” என்று சரியாய் அவர் ஆபீசுக்குகிளம்பும் நேரமாய்ப்பார்த்துக்கொடுத்து கையெழுத்து வாங்க்கிகொள்வேன்  ரயிலைப்பிடிக்கற அவசரத்தில் அவருக்கும்  நான்கணக்கில் கம்மி மார்க் வாங்கினதை கவனிக்க மறந்துபோகும்:)
 
சரி இப்ப  ஞாபகம் வருதே  ஞாபகம் வருதேன்னு  நான் பாடணும்னா  மூலிகை மேனகாவைப்பார்த்தே  ஆகணும்.
 
மூலிகை மேனகா  பற்றி  முன்னமே எழுதி இருக்கேன்  பதிவில்
 
என்னைக்கண்டதும்   ஹாலிலிருந்த மூலிகைக்குப்பைகளை நகர்த்தி
உட்கா ரஇடம் செய்தாள். வீடு ஹால் என்றால் சோபா நாற்காலி டீபாய் இருக்கும் மேனகா வீட்டில்  உரல் ஏந்திரம் அம்மி  கஷாய  ஜாடிகள். காலி சீசாக்கள். அலமாரியில் கண்ணாடி பாட்டில்களில் பெரிசும் சின்னதுமாய் கலர்கலராய்  குளிகை உருண்டைகள்  
 
 கல் உரலில் அவள் கணவர்  இவளை நினைத்து எதையோ கோபமாய்  இடித்துக்கொண்டிருந்தார்.
 
ஆயிற்று மூணு வருஷம் கழித்து இப்பதான் அவளை மீண்டும் பார்க்கிறேன்
 
”மேனகா  இன்னமும் நீ மூலிகை ஆராய்ச்சியிலிருந்து மீளவில்லையா?”
 
அதெப்படி  என் லட்சியம்  மெமரியோ ஃபோலியோ வியாதிக்கு  மருந்து கண்டுபிடிச்சாதான்”
 
என்ன அது மெமொரியோ போலியோ அல்லது போகலியோ?”
 
போலியோ  போகலியோ  இ்ல்லை..ஸ்டைலா  ஃபோலியோ! அதாவது நினைவுகள்  பின்னோக்கி ராமாயண மஹாபாரதக்காலம் வரை செல்லும்   அதுக்குத்தான்   மருந்து கண்டுபிடிச்சேன்...திரும்பி நிகழ்காலம் வரும் மருந்தும் கண்டுபிடிச்சிட்டா  சக்சஸ் சக்ஸஸ் எனக்கு!”
 
ஆஹா  அருமை  சங்கொலியுடன் உன் மகாபாராதக்கனவு நிறைவேறட்டும் எனக்கு என்னபிரச்சினைன்னா...”
 
சொன்னேன்
 
அட இதான?  இதுக்கு  சிறுமறதிகுளிகை   இருக்கு போட்டுக்கோ சரியாகிடும்
 
ஏண்டி  நினைவு ரொம்பபின்னோகிப்போறதுக்கு ஆங்கிலப்பெயர் வைக்கிற ஆனாசின்ன மறதிக்கு தமிழ்ப்பெயரா அநியாயமா இல்ல?”
 
கின்னஸ்முயற்சிக்கு  ஹிஹி
 
சரி ஒரு மாத்திரையோ குளிகையோ கொடு 
 
மேனகாவின் செல்‘ பார்த்த ஞாபகம் இல்லையோ ’என்றதால் அவள் “மூலிகை மேனகா ஹியர் சொல்லுங்க” என்று   பச்சிலைக்கையுடன் செல்லை எடுத்துக்காதில் வைத்துக்கொண்டாள் பொறுப்பை தன்  அஸ்ஸிஸ்டென்ட் பொன்னம்மாவிடம் கொடுத்தாள்
 
அந்தம்மாக்கு  மேனகா சரியா சம்பளம் கொடுப்பதில்லை என்பது பார்வையிலேயே தெரிந்துபோனது.’இனிமே வருவியா இந்தப்பக்கம்?’ என்கிற மாதிரி  முறைத்துவிட்டு ஒரு பாட்டிலை  திறந்து அலட்சியமாய் என்னிடம்  ஒரு  எலந்தப்பழ சைஸ் சமாசாரத்தை வீசினாள்.
 
“வாய்லபோட்டு  முழுங்கு:”
 
இல்லாட்டி உன்னை நான் முழுங்கிடுவேன் அக்காங் என்கிறமாதிரி  கண்ணை உருட்டினாள்.
 
 
முதலில் கசந்து பிறகு துவர்ந்து அப்புறம் இனித்துஎன அறுசுவைகளுடன் எலந்தப்பழம் ஜோராக இருக்கவே  பொன்னம்மாக்குத்தெரியாமல் நைசாய்க்கடித்துப்பின் முழுங்கிவிட்டேன்.
 
 
“சரி  இப்போ நான் ரொம்ப பிசி ஏகப்பட்ட கஸ்டமருங்க...நோயாளிங்க வாழ்வா சாவான்னு போராட்டத்துடன் என் வாசலில்  தவம் கிடக்கிறவங்கன்னு ஏராள ஜனங்கள்  அப்புறம் பேசறேன் என்ன?” என்று செல்போனைக்காதிலிருந்த எடுத்த மேனகா  ஈ காக்கா  நான் மட்டுமிருந்த வாசலுக்கு  விரைந்தாள்..
 
என்னடி கிளம்பறியா குளிகை உள் சென்ற குதூகலமோ  உன் முகத்தில்?”
 
என்றவள் சட்டென பொன்னமாவிடம்”பொன்னு  என்ன குளிகை கொடுத்தே  இவளுக்கு?  மூஞ்சி ரியாக்‌ஷன் சரி இல்லையே  அந்த   மிளகு சைஸ்  குளிகைதானே  அலமாரி முதல்தட்டிலிருந்து கொடுத்தே?” என்று கலவரமாய் கேட்டாள்.
 
“இல்லீங்கம்மா   ரெண்டாம் தட்டுல  இருந்திச்சே  எலந்தப்பழ சைசு குளிகை ..
அதைத்தான்...”
 
:”கொடுத்திட்டியா? ஐயோ  மோசம் போச்சி அதை  குரங்குக்குக்கொடுத்து ராமாயணகாலத்துக்கு அனுப்ப நினச்சேனே  இவளுக்குக்கொடுத்திட்டியே  இவள்  எங்கே போகப்போகிறாளோ?’ என்று மேனகா  தவிக்கையில் நான்
பீமனின் இருப்பிடத்திற்கு வந்துவிட்டேன்.
 
 
 .ரங்காராவ் போல ஆஜானுபாவாய்    நின்றுகொண்டு,”ஆஹ்ஹஹ்ஹஹா!கல்யாண சமையல்சாதம் ’பாடிக்கொண்டிருந்தார் மிஸ்டர் பீம்!
 
அந்தப்பக்கம் அர்ஜுனன்  வில்லோடு (கொஞ்சம் ஹாண்ட்சம்) ..
:தாயே வணக்கம்” என்ற குரல் கேட்கவும்திரும்பினால்; தர்மர் தன் அன்னையை வணங்கிக்   கொண்டிருந்தார்.
 
வெண்ணிற ஆடையில் அமைதியும் அழகுமாய்  யாரது? 
 
ஆ இவங்கதான் குந்தியா  அவங்கிட்ட ரொம்ப நாளா ஒரு கேள்வி கேட்கணும்னு.
 
 அம்மா இது உங்களுக்கு இயற்பெயரா காரணப்பெய்ரா?
 
 
அதற்குள்  பீமன்  அதட்டினார்.
 
”யாரது புதுப்பெண்  நடைஉடையெல்லாம்   மாறி இருக்கிறதே கௌரவர்களின் ஒற்றனோ(ளோ)  சீவுங்கள் இவள் தலையை?”
 
 
ஐயோ  இல்லை இல்லை நானும் சமையலுக்கு உதவலாம்னு
 
ஓ  அப்படியா உனக்கு  என்ன சமைக்கத்தெரியும்?
 
மைசூர்பாக் மங்கை நான்! வேண்டுமானால் கால இயந்திரத்தில் ஏறி 
2007லிருந்து இன்றுவரை அதன்புகழை  இணைய வெளியில்  காணச்சொல்லுங்கள் பீமதேவரே“
 
 
ம்ம்  யாரங்கே கால் இயந்திரமேறி இவள் கூறுவது சரிதானாஎன்று கண்டுபிடித்துவாருங்கள்
 
பீமரே ஒரு வி்ண்ணப்பம் !அன்னாரை  தமிழ்நாடுபக்கம்  மட்டும் போக சொல்லவேண்டாம் அங்கு எப்போதும்மின்தடை
 
 
என்னது மிளகுவடையா?
 
ஏந்தான் இப்படி சாப்பாட்டுராமனாக  இருக்கிறாரோ என  வியந்தபடி
நிலைமையைப்புரியவைத்தேன்.
 
தனது  வீரன்  உண்மையைக்கண்டுவந்து உணர்த்தியதும் மகிழ்ந்த  பீமன்  ஹஸ்தினாபுரம் அருகே   ஞாபஹாஸ்தினபுரம் தேசத்திற்கு என்னை மகாராணியாக்க  பட்டாபிஷேக நாள் எல்லாம் குறித்துவிட்டபோது  அதோ  அதோ மேனகா  தலை தெறிக்க என்னை நோக்கி ஓடிவந்துகொண்டிருக்கிறாள்.
 
“ மாற்றுக்குளிகை கண்டுபிடிச்சிட்டேன்! இந்தா   ஷைலஜா இந்தக்குளிகையைப்போட்டுக்கொள்..அப்பதான் நீ ஊர் திரும்பலாம்  சீக்கிரம் சீக்கிரம்”“
 
நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கள்?:).
 
 
 
 
 

 
மேலும் படிக்க... "ஞாபகம் வருதே ஞாபகம் வருதே:)"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.