Social Icons

Pages

Monday, October 31, 2011

வாழ்க்கைப்பாடம்.(வம்சி சிறுகதைப்போட்டி 2011)


எதிர்பாராமல் உங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்று யாரும் என்னிடம் சொல்லாத பொழுதில் அதிர்ஷ்டம் அடித்துவிட்டது! நாளை எனக்கு எண்பதாவது வயது பிறந்த நாள் கொண்டாட்டத் திருநாளுக்கு வீட்டிற்கு உறவும் சொந்தமும் வந்து குவிந்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் இப்படி ஒரு அதிர்ஷ்டம்!

இருபத்தி இரண்டு வருஷம் முன்பு ரிடையர் ஆனபோது பென்ஷன் வேண்டி மேலிடத்துக்கு ஆறெழுபேராய் சேர்த்து எழுதிப்போட்டோம்.கிணற்றில்போட்ட கல்லாய் பலநாள் கிடந்தது.கிட்டத்தட்ட அதை நான் மறந்துவிட்ட வேளையில் பழைய நண்பர்கள் விடாமல்போராடி சாதித்துவிட்டனர். சேர்த்துவைத்து இப்போது முதல்தவணையாக கைக்கு் பெரியதொகையாக கிடைத்துவிட்டது!அதிர்ஷ்டம் என்று நான்குறிப்பிட்டது இதைத்தான்.

ஒன்றும் பெரிய ஜில்லா கலெக்டர் வேலை இல்லை.திருச்சியில்ரயில்வே டிபார்ட்மெண்டைச் சேர்ந்த ஒரு கோவாபரேடிவ் சொசைட்டி அலுவலகம்தான். அங்கே நான் விசுவாசமாய் கணக்கு எழுதிக்கொண்டிருந்தது நிஜம் .பதினெட்டு வயசில் வேலையில் சேர்ந்தபோது மாச சம்பளம் 75 ரூபாயில் ஆரம்பித்து ரிடையர் ஆகும்போது 700ரூபாயில் முடிந்தது. வருஷம் ஒருதடவை போனஸ் வரும் . அதற்கும் அப்போது செலவுகாத்துக்கொண்டிருக்கும். பெரிய குடும்பத்தின் மூத்தமகனாய்ப் பிறந்த ஆண்களுக்கு இது ஒரு சாபம்தான் அதுவும் ஒரு மத்திய தரக்குடும்பத்தில் குடும்பத்தலைவர் சீக்கிரமே இறந்து பொறுப்பெல்லாம் சுமக்கும் மூத்தபிள்ளையாய் பிறந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.

தம்பிகளைப் படிக்கவைத்து தங்கைகளுக்குக் கல்யாணம் செய்து வருஷ சீர்கள் வளைகாப்பு பிள்ளைப்பேறு என்று செலவுகள் தொடர்கதையாக இருக்கும். முப்பது வயதில் லேசாய் முன்வழுக்கை விழும்போது அம்மா எனக்கும் ஒரு பெண்ணைப்பார்த்தாள். அவளுக்கும் பெரியகுடும்பம். அவள் அப்பாவிற்கு ஏழு குழந்தைகள்.ஜானகிதான் மூத்தவள்.மாமனாருக்கும் பெரிய உத்தியோகமில்லை அதனால் அவள் ஏதும் மஞ்சக்காணி சொத்து, நகை, நட்டு என்று கொண்டுவரவில்லை.

அம்மா வேறு பெரிய மனதோடு “ பொண்ணுக்கு நகை ஏதும் வேண்டாம்...என் பையன் பத்ரிகூட அன்பாய் குடும்பம் நடத்தினால் போதும்” என்று சொல்லிவிட்டாள். ஆனால் என் மனைவி ஜானகி நல்லபெண் தான். குடும்பத்தில் அவளால் சச்சரவு என்பது இன்றுவரை கிடையாது. அவளும் பலவருடம் கழித்து பையனும் பெண்ணும் சம்பாதித்து கழுத்தில் தங்கச்சங்கிலி வாங்கிப் போடும்வரை காத்திருந்தாள். ஒருநாள் கூட என்னிடம் நகை கேட்டு புலம்பியதில்லை.

ஜானகிமட்டுமா, என் குழந்தைகள் நாலுபேரும் பத்தரைமாத்துத்தங்கம்தான். வளர்த்து ஆளாக்கிய கூடப்பிறந்தவர்களும், மற்றும் தூரத்து உறவினர்களும் இன்றுவரை நன்றியோடு இருக்கிறார்கள்.குறை ஒன்றும் இல்லைதான்.

ஆனாலும் போனவாரம் பென்ஷன் பணம் முதல்தவணையாய் முப்பதாயிரம் ரூபாய்க்கான செக்கை அனந்தராமன் என்வீடு தேடிவந்து என்னிடம் கொடுத்தபோது அவர் கழுத்தைப்பார்க்க நேர்ந்ததில் அந்த ஆசை மீண்டும் வளர ஆரம்பித்தது.சின்ன ஆலிலை கிருஷ்ணர் உருவம் பதித்த டாலருடன் அவர் கழுத்தில் செயின் மினுமினுத்தது.இருபதுவயதில் ஊரில் மைனர்துரைசாமி கழுத்தில் ஊசலாடியதை பார்த்தபோதுமுதலில் துளிர்விட்டதை,
’ இதெல்லாம உனக்கு சாத்தியமே இல்லை ’என்று மனம் பட்டென்று அடக்கிவிட்டது.

பவுன் எ்ழுபதுரூபாய் என்றுவிற்றகாலத்தில் கையில் ஏழுரூபாய் தங்குவதே அபூர்வமாக இருந்தது.அதே நிலமை தான் பிறகு எழுநூறு ரூபாய் ஆகும்வரையும் நீடித்தது. மகனும் மகள்களும் படித்து முன்னேறியதும் பெண்களின் திருமணத்திற்கு பணம் சேர்த்து திருமணமும் நடந்து எல்லோரும் இன்று பவுன் இந்தவிலை விற்கும்போதிலும் நினைத்தால் தங்கசங்கிலி வளையல் என வாங்கிக்கொள்கிறார்கள் ஜனாகிக்கும் வாங்கித் தருகிறார்கள்.


எனக்கு சேரவேண்டிய இந்தப்பணம் எதிர்பாராமல் கிடைத்திருக்கிறது .இதுவிஷயம் யாருக்கும்தெரியாது அனந்தராமன் வீடுவந்தபோது மகன் மருமகள் மனைவி பேரக்குழந்தைகள் யாருமே வீட்டில் இல்லாமல் போனதும் நல்லதாயிற்று.

செக்கைக்கொண்டு பாங்கில்போட்டு பணத்தையும் எடுத்துக்கொண்டு விட்டேன். கூலிசேதாரம் எல்லாம் சேர்த்து தங்கக்கடை ஒன்றில் சின்னதாய் ஆலிலை க்ருஷ்ணர் டாலருடன் ஒண்ணேகால் பவுனில்செயின் ஒன்றும் வாங்கிவிட்டேன். எனக்கு யாரும் தானாக தங்கசங்கிலியோ மோதிரமோ வாங்கித்தரப்போவதில்லை என்பது இத்தனை வருஷ காலத்தில் நிச்சயமாகிவிட்டது. எனக்கும் வயதாகிக்கொண்டுவருகிறது எதற்கு மற்றவர்களிடம் தங்கசங்கிலி வேண்டும் என்று கேட்டு தொந்தரவு செய்ய வேண்டும்? கையில்தான் என் உழைப்பின் ஊதியமா பெரிய தொகை வந்து விழுந்திருக்கிறதே!

நாளை எண்பதாவது பிறந்த நாளின்போது கழுத்தில் தங்கச்சங்கிலியைப் போட்டுக்கொண்டு எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தவேண்டும் என்று தோன்றிவிட்டது !

”அப்பா! அப்பா! ரூமில் தனியா உட்கார்ந்து என்ன செய்றீங்க ?”என்றுகேட்டபடி அருகில் வந்த மகள் வித்யா ,” நாளைக்கு உங்களுக்கு எண்பதுவயசுன்னா நம்பவே முடியலப்பா...பத்துவயசுக்கு மேல குறைச்சி சொல்லலாம் போலத்தான் இருக்கீங்க! அதுக்கு உங்க சாப்பாட்டு நியமம் தான் காரணம் கூடவே களங்கமில்லாத மனசும்தான்! அப்பா! நீ்ங்க சொன்னமாதிரி சத்திரத்தில் அமர்க்களமாய் செய்யாமல் விட்டோடு எளிமையாய் நெருங்கின உறவுக்காரங்களைமட்டும் அழைச்சிதான் உங்க எண்பதாவது பிறந்தநாளைக்கொண்டாடப்போறோம்.
உங்க பேரப்பசங்க ஏதோ ட்ராமா போடப்போறாங்க வாங்கமாடிக்கு, பார்க்கலாம்ப்பா”
என்று அன்பும்பரிவுமாய் அழைத்தாள்.

”வரேன்மா. நீமுன்னால போ. நான் இதோ வரென்..” என்று அவளை அனுப்பிவிட்டு செயினை பீரோவில் மேல்தட்டில் வைத்துவிட்டுப் புறப்பட்டேன்.

மொட்டைமாடியில் பெரியமகளின் மகன் சதீஷ், பெரிய மகனின் மகள் ரம்யா சின்னமகனின் குழந்தை உஷா எல்லாரும் மேக் அப்போடு இருந்தனர்.

வித்யா தொண்டையைக்கனைத்துக்கொண்டு கைவிரல்களை மைக்போல குவித்துவிட்டு,”அனைவருக்கும் நல்வரவு. நாளை நடக்க இருக்கும் எந்தையாரின் எண்பதாம் ஆண்டு பிறந்த நாளை ஒட்டி இன்று இந்த இனிய இரவு நேரத்தில் இந்த இல்லத்தின் உப்பரிகைக்கு வரலாறு காணாத அளவில் வந்திருக்கும் மகா ஜனங்களுக்கு வந்தனம். இப்போது தாங்கள் ‘எங்கள்குடும்பம்’ என்னும் சிறுவர் நாடகத்தைக்காணலாம்.நாடகத்தை எழுதி இயக்கியவர் எங்கள் வீட்டு சகலகலாவல்லவர், டி.ராஜேந்தரின் வாரிசாகிய என் அன்பு அண்ணன் அரவிந்தன்.மொட்டைமாடில லைட்டுகளை அழகுற அமைத்த லைட்பாய் சின்ன மாப்பிள்ளை ராம்குமார்!” என்று குறும்பாய்க்கூறி முடிக்க உறவுக்கூட்டம் ஹோவென சிரித்தபடி பெரிதாய் கைதட்டியது.

பெரிய மகனின் இரண்டாவது மகன் சதீஷ் பத்துவயதுதான் ஆகிறது, என்னைப்போல சற்று மேலே தூக்கிக்கட்டிய வெள்ளை வேஷ்டியும் காமராஜர் பாணியில் அரைக்கைசட்டையும் அணிந்துகொண்டு, வாயில் வெற்றிலையை குதப்பியபடி நொடிக்கொருதடவை முகவாய்க்கட்டையை விரலால் தடவியபடி பேச ஆரம்பித்தான்.

குழந்தைகளை நாம் தான் கவனித்து வளர்ப்பதாக பெருமைப்பட்டுக்கொள்கிறோம் ஆனால் குழந்தைகள் தான் நம்மை நன்கு கவனிக்கின்றன!அதனால் தான் நம்மை பிரதிபலிக்கின்றன.‘இப்புவியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஆண்டவன் இன்னும் மானுடத்தில் நம்பிக்கையை இழக்கவில்லை என்னும் செய்தியைக்கொண்டுவருகிறது’ என்ற ரவீந்திரநாத்தின் வைர வரிகள் நினைவிற்கு வந்தன.

சின்ன பேத்தி ரம்யாதான் பாட்டிஜானகியாம்! மடிசார் புடவையைக் கட்டிக்கொண்டு நெற்றியில் பெரியகுங்குமப்பொட்டும் கொண்டையில் பூவும் சுற்றிக்கொண்டும் வந்துவிட்டாள்.

சின்னப்பேரன் ராஜேஷ் , வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தாளியாம். அவனிடம் நானும் ஜானகியும் எப்படிப்பேசி உபசரித்து அனுப்புகிறோம் என்பதாக நடித்துக்காட்டினார்கள்.


மூன்று குழந்தைகளும் அசத்திவிட்டார்கள் எனினும் சதீஷின் தத்ரூபமான நடிப்பில்
என் தங்கை கல்யாணி உணர்ச்சிவசப்பட்டவளாய் அவனை அப்படியே கட்டிக்கொண்டு கண்பனித்தாள்.”கண்ணா அப்படியே எங்க பத்ரிண்ணா மாதிரியே நடிக்கிறியே! ஒவ்வொரு அசைவிலும் பேச்சிலும் அண்ணாவைப்பார்த்தேன்.. அடேயப்பா இந்த வயசில் உனக்கு எப்பேர்ப்பட்ட திறமை! உனக்கு நான் ஏதாவது பரிசு தரணும் இதுக்கு..” என்றவள் சட்டென தன் கழுத்திலிருந்து ஒரு தங்க சங்கிலியை கழற்றி எடுத்து அவன் கழுத்தில்போட்டுவிட்டாள்.

அனைவரும் சந்தோஷத்தில் கையைத்தட்டினர். நானும் தான்.

அப்போது சதீஷ்,” அத்தைப்பாட்டி! பரிசுக்கு தாங்க்ஸ்..நாங்கள்ளாம் காந்திதாத்தாவைப் பார்த்ததில்ல.. ஆனா நேர்மை வாய்மை எளிமைக்கு இலக்கணமா எங்க பத்ரி தாத்தாவைத்தான் பார்க்கிறோம். பத்ரிதாத்தா எளிமையானவர். கதர்வேஷ்டி கதர் சட்டை தவிர அவர் உடம்பில் நாங்க எப்போதும் பார்க்கிறது எந்த சூழ்நிலையிலும் வாடாத அவர் முகத்துப் புன்னகையைத்தான்,. அந்த விலைமதிப்பில்லாத புன்னகைக்கு முன்னாடி தங்க நகை எதுவும் எடுபடாதுன்னுதான் நாங்க அவருக்கு இதுவரை தங்கத்தில் எதுவும் வாங்கித்தரலை. அப்படி வாங்கித் தந்து நாங்க எப்பவும் தாத்தாவின் மதிப்பை குறைக்கவும் நினைக்கல. அதனால இப்போ பத்ரிதாத்தா தங்க செயினை உங்ககிட்டயே திருப்பிக்கொடுக்கிறார்” என்று சொல்லி செயினைக் கழற்றிவிட்டான்.

மறுபடி கூட்டம் கைதட்டியது.

எனக்குத்தான் யாரோ தலையில் தட்டிய மாதிரி இருந்தது.

+***********************************************************************************
.
மேலும் படிக்க... "வாழ்க்கைப்பாடம்.(வம்சி சிறுகதைப்போட்டி 2011)"

Sunday, October 30, 2011

அடைக்கலம்.(வம்சி சிறுகதைப்போட்டி 2011)



கிளியை வளர்த்து பூனைகையில் கொடுத்தமாதிரி என்பார்கள் அல்லவா இப்போது நிஜமாகவே ஒரு கிளி, பூனையிடம் மாட்டிக்கொண்டுவிட்டது.

கிளியைப்பற்றிய விவரத்திற்கு முன்பு பூனையைப் பார்க்கலாம். அந்தப்பெண்பூனையி்ன் பெயர் அஞ்சலை. அஞ்சலேக்கா என்று தான் அந்த கீரைக்காரத் தெரு முழுக்க அவளை அழைக்கும்.பெயருக்கேற்றமாதிரி எதற்கும் அஞ்சாதவள் போன்ற கட்டுமஸ்தானஉடம்பு. கருப்பு நிறம். கோழிமுட்டையாய் கண்கள்.அதில் எப்போதும் உக்கிரம் தவழும் .
வயது ஐம்பதுகளில் இருக்கலாம்.

ரங்கபுதூர் என்ற நாலைந்து தெருக்களும் சிறு கோயிலும் கொண்ட அந்த சின்ன ஊரில் அவளைக்கண்டு பயப்படாதவர்களே இல்லை எனலாம்.உருவம் பேச்சு பார்வை எல்லாவற்றிலும் முரட்டுத்தன்மைதான். அவள் செய்யும் வியாபாரம் வேறு அவளின் குணத்தை அச்சுறுத்தலாய் காட்ட வசதியாய் இருந்தது. சாதாரணமாய் ஆண்கள் தான் கசாப்புக்கடை வைப்பார்கள் ஆனால் அஞ்சலை வீட்டு வாசலில் வேப்பமர நிழலில் அமைந்த திண்ணையில் தினம்மூன்று ஆடுகளை நாலுகோழிகளை சர்வ சகஜமாய் வெட்டி அதன் இறைச்சியை வியாபாரத்திற்கு தயார் செய்வாள். மதியம் மூன்றுமணிவரை கவிச்சி வியாபாரம் அங்கே களைகட்டும்.

‘என்னா பாக்கறீங்க ஒரு பொட்டச்சி கவிச்சி விக்குறான்னா? பொம்பளைங்க ப்ளேன் ஓட்டுனா மதிப்பீங்க, பொழப்புக்கு நாதியில்லாம புருஷனை பறிகொடுத்தவ இப்படி கறிக்கடை வச்சா எளப்பமா பார்ப்பீங்களாக்கும்? டவுனு கவிச்சிமார்க்கெட்டை விட இங்கிட்டு சல்லுசுன்னுதானே அல்லாரும் பறந்தடிச்சிட்டுவரீங்க.. கறிய வாங்கிட்டு வாய முடிட்டுபோங்க ஆமா..‘ என்று தன்னைக் கிண்டலாய் பார்க்கும் ஆண்களை அதிரடியாய் கேட்டு தலைகுனிய வைப்பாள்.

அவள் அலட்சியமாய் கட்டம்போட கண்டாங்கி சேலைத்தலைப்பை உதறியபடி தெருவில் நிமிர்ந்து நடந்து வந்தால் அண்டசராசரம் குலுங்கும். எதிரில் கண்டவர்களுடன் வம்புவார்த்தை பேசாமல் போகமாட்டாள்.அப்படித்தான் ஒருநாள் வசந்தா அவளிடம் மாட்டிக்கொண்டாள்.

“யாருடி நீ? ஊருக்கு புதுசா இதே தெருதானா?”

“ஆ..ஆமாம்.பதினாலாம் நம்பர்வீட்டுவாசல் போர்ஷன்ல குடி வந்து ஒருமாசமாச்சி.”வசந்தா பயத்தில் மென்று முழுங்கினாள்.

“அதென்ன கையில்பெரிய கட்டைப்பையி.. அதுல நாலைஞ்சி சாப்பாட்டுக்காரியரு?”

”ஆ அதுவந்து...மதியம் சாப்பாட்டை சமைச்சி காரியர்லபோட்டு டவுன்ல ஒரு ஆபீசுக்குக் கொண்டுபோறேன்“

”ஆங் பாத்தா முப்பது வயசு தான் இருக்கும்போலிருக்குது? நீ ஏன் சமைக்கணும் டவுனுக்கு கொண்டுபோவணும்? உன் புருஷனுக்கு வேலைவெட்டி கிடையாதா?”

”இல்ல அவருக்கு ஆக்சிடண்ட் ஆகிடிச்சி .வீட்டோடகுழந்தையைப்பார்த்திட்டு கெடக்கறாரு...அவரும் சமையல்வேலைதான் பார்த்தாரு.. டவுன்ல ’கிரிகேட்டரிங்’ல இருந்தார் இப்போ கால்ல அடிபட்டு வீட்டோட இருக்காரு.. அதான்..”

”என்னா வய்சு குளந்தைக்கு?”

”நாலுவயசு,பொண்குழந்தை, பேரு திவ்யா”

”அது கெடக்கட்டும்..கொண்டா உன்வீட்டு சோறு தின்னுத்தான்ப் பாக்குறன்”

நடு ரோட்டில் வசந்தாவின் கையிலிருந்த ஒருமூன்றடுக்கு எவர்சில்வர் காரியரைப் பிடுங்கினாள்.

திறந்து விரல்வைத்து நாவில் ருசிபார்த்தவள்,” ஆஹா வத்தகுளம்பா இது? இதென்ன வாளைக்கா வறுவலா? தயிர்ச்சோறுவேற..ஏண்டி ஒரு கருவாடு கவிச்சி இல்லாம என்ன சமைக்றீங்க? ஆங்? என்று முழங்கினாள்.

:அதெல்லாம் சமைக்கதெரியாதுங்க.. சை.. சைவம்தான் செய்ய வரும்”


”த்தூ,,உங்க வத்தகுளம்பும் தயிர் சோறும் ஒரு சாப்பாடா தூத்தேறி “ காறித்துப்பிவிட்டு,

”சரி சரி போ...ஆங் உன் பேரு என்ன?”என்றாள் அதட்டுவதுபோல.

”வ.. வசந்தா”

”தா பார் வசந்தா.புதுசா வந்திருக்கீங்க..ஊர்ல ரவுடிங்க எவனாச்சும் உங்கவீட்டாண்ட உனக்கு தொல்ல செஞ்சா சொல்லு என்கிட்ட நான் தட்டிவக்கிறேன் என்ன? ஹெஹெஹெ..தலை நான் இருக்க வாலு ஆடாதுதான். ஆனாலும் எச்சரிக்க செய்யுறேன் என்ன?”

”ச சரிங்க..”



வசந்தாவிற்கு அன்றிலிருந்தே வயிற்றில் புளியைக்கரைக்க ஆரம்பித்தது.
கணவன் சுந்தரத்திடம் நடந்ததைக்கூறி,”என்னங்க,, இந்த ஊர்ல இனியும் இருக்கணுமா? அஞ்சலைபொம்பிளை தாதா மாதிரி இருக்கா. அவளைப்பத்தி இந்த போர்ஷன்ல பலர் பலவிதமா சொல்லி பயமுறுத்துறாங்க.நாம இப்படி அவவீட்டுக்கு ரண்டே வீடுதள்ளி இருக்கவும் வேணாம் தினமும் நான் உசுரைக்கையில் பி்டிச்சிட்டு பஸ் ஸ்டாண்டுக்குப் போய்வரவும்வேணாம் ...பேசாம டவுனுக்கே குடி போயிடலாம் ..” என்றாள்.

” என் கால் கொஞ்சம் நடக்கவரட்டும் வசந்தா நாம போயிடலாம்... நமக்கென்ன கைவண்டில கொண்டுபோகிற சாமான்கள்தானே பெருசா ஏதுமில்லயே,என்னிக்கு வேணா போயிடலாம் கவலைப்படாதே..”சுந்தரம் சாமாதானப்படுத்தினான்.

அன்று டவுனுக்குப் போய் ஆபீசில் காரியரைகொடுத்து வீடுவந்தவள் மகள் திவ்யாவின் கையில் ஒரு கிளிக்கூண்டினைப் பார்த்தாள். சிறிய பச்சைக்கிளி, சிவப்பு அலகோடு அழகாக இருந்தது.

“வாசலில் ஒரு ஆள் கொண்டுவந்தான் வசந்தா! குழந்தையும் ஆசைப்பட்டாள்னு வாங்கினேன் அதிகம் விலை இல்லை” என்ற சுந்தரம் கிளிக்கு பழக்கொட்டைகள் எதையோ கொடுக்க ஆரம்பித்தான்.

“என்னவோ போங்க அப்பாக்கும் பெண்ணுக்கும் பொழுது போகணுமே..ஆச்சி, ஜூன் வந்தா திவ்யாக்குட்டியை டவுன்ல அரசுபள்ளில ஒண்ணாங்கிளாஸ்ல சேர்த்துடணும் வசதி இருந்தா கான்வெண்ட்ல கிண்டர்கார்டன்ல போட்ருப்போம். என்ன செய்றது?”

“படிக்கிற குழந்தைங்க எங்கயும் நல்லா படிச்சி முன்னுக்கு வருவாங்க...நீ வேணா பார்த்திட்டே ,திவ்யா அமோகமா வருவா..இப்போவே ஏபிசிடி எல்லாம் சொல்றா யாராவது வீடுவந்தா வெல்கம் சொல்லுன்ன்னு எனக்குத்தெரிஞ்ச இங்கிலீஷ்ல அவளுக்கும் சொல்லிக்கொடுத்தேன் அதை அவ கிளிக்கும் சொல்லித்தரா!”சுந்தரம் பெருமைப்பட்டுக்கொண்டான்.



பத்துநாள் கடந்திருக்கும்..அன்று வீட்டில் திவ்யா உரக்க அழ ஆரம்பிக்கவும் வசந்தா டவுனிலிருந்து பஸ்ஸைப்பிடித்து உள்ளே சரியாக இருந்தது.
“என்னாச்சு திவ்யாக்கு?” செருப்பை அவிழ்த்தபடி கேட்டாள் வசந்தா.

சுந்தரம் பதட்டமாய்,”நம்மவீட்டு வாசல் திண்ணைல உக்காந்திட்டு கிளிக்கூண்டைத்திறந்து பழம்கொடுத்திட்டே இருந்தோம்.. சட்டுனு அது பறக்க ஆரம்பிக்கும்னு நினைக்கவே இல்ல. என்னால எழுந்து நின்னு அதைப்பிடிக்கவும் முடியல .. கிளி வேகமா மேல பறந்து அஞ்சலை வீட்டு வேப்பமரத்து கிளைலபோயி உக்காந்திடிச்சி.. நான் காலைக் கெந்திகெந்தி ரோடுக்கு வரவும் அஞ்சலைவீட்ல யாரோ ஒரு பையன் அதை மரத்துல ஏறி கையில் பிடிக்கவும் சரியா இருந்திச்சி... என்ன செய்யப்போறாங்களோ ஆட்டுக்கறி கோழிக்கறி, முயல்கறிமாதிரி கிளிக்கறி செய்து அவ விக்கலாம் அப்படீன்னு நினக்கி்றபோதே எனக்கு உடம்பு பதறிப்போயிடிச்சி...வேற யார் வீடா இருந்தாலும் நான் தைரியமா போயிடுவேன் கேட்டுடுவேன் கிளியைக்கொடுங்கன்னு. அஞ்சலைவீடுன்னதும் குலை நடுங்கிடிச்சி வசந்தா.. திவ்யாவும் கிளி போன துக்கத்துலதுடிச்சி அழறா..ஏன் வசந்தா நீ போய் கேட்டுப்பாரேன் கிளியைதரமுடியுமான்னு?” என்றான் கெஞ்சுதலாய்.

”ஐயோ அவ ராட்சசியாச்சே..மனசெல்லாம் பாறாங்கல்லு.இதயமே இல்லாதவ.அவகிட்ட யாருங்க மல்லுக்கு நிக்கறது? விடிஞ்செழுந்தா ரத்தத்துல கையைக் கழுவறவ..’உன் கிளியா? என்ன சாட்சி?ன்னு இடக்காய் கேட்பாள்..விடுங்க..இதுக்கெல்லாம் விடிவுகாலம் வரப்போகுது..ஆமாம்.. இன்னிக்குன்னு பார்த்து லஞ்ச் கொண்டுபோகிற ஆபீஸ்மேனேஜர்-பேரு-ராமநாதன் - என்கிட்ட இரண்டொருநாளில் அவரும்,அவர்மனைவியும் அவங்க மகள் பிரசவத்துக்கு அமெரிக்காவுக்கு மூணுமாசம்போகப்போவதால் பூட்டின வீட்டைப் பார்த்துக்க நம்பிக்கையா ஏதும் ஆள் தெரிஞ்சா சொல்லும்மான்னார். தங்கிக்கொள்ள வீட்டின் பின்பக்கம் இருக்கிற அவுட் ஹவுசைத் தரேங்கிறார்..நாங்களே வரோம்னு நான் சொன்னதும் சந்தோஷமா சம்மதிச்சார்... நாளைக்காலைல சட்டுனு கிளம்பிடுவோம் ...இந்தவீட்டு சொந்தக்காரர் டவுன்லதான் இருக்காரு.. அவருகிட்ட உங்க கால்ல ஆபரேஷன் செய்யணும் அதனாலகாலி செய்றோம், டவுன்ல வீடு பாத்துப்போறோம்னு சொல்லிடலாம். மூணுமாச அட்வான்ஸ் ஆயிரத்து இருநூறுருபா கொடுத்திருந்தோம்..பாழாப்போகிற அஞ்சலையால் ரண்டே மாசம்தங்கிட்டு ஒருமாச வாடகைப்பணத்தை இழக்கிறோம். பரவாயில்லை இன்னு்ம் அவளால் நமக்கு தொல்லைவரதுக்குள்ள புறப்பட்டுடலாம்...”

ஆயிற்று வசந்தா குடும்பத்துடன் வீட்டைக்காலி செய்துவந்து மூன்றுமாதத்திற்குமேலாகிவிட்டது.
இன்னும் இரண்டு ஆபீசுகளிலும் பாங்க் ஒன்றிலும் அவளிடம சாப்பாட்டுக் காரியர் கொண்டுவரும்படி கேட்டுவிட்டதால் வேலை சரியாக இருந்தது. சுந்தரம் மெல்ல நடக்க ஆரம்பித்துவிட்டான்.திவ்யாவும் கொஞ்சநாளைக்குக் கிளி நினைவில் அழுதுகொண்டிருந்தாள்.பிறகு பள்ளிக்கூடம் சேர ஆரம்பித்ததும் படிப்பில் கவனம் போய்விட்டது.
அமெரிக்கா சென்ற ராமனாதன் தம்பதிகள் வீடு திரும்பிவந்துவிட்டனர். அவுட்வுசில் தொடர்ந்து சுந்தரமும் வசந்தாவும் குழந்தையுடன் தங்கிக்கொள்ள சம்மதம் தெரிவித்தனர்.

அன்று ரங்கபுதூர் கோயிலின் தேர்த்திருவிழாவைப் பார்க்க காரில் போகலாம் என்று வசந்தாவை திருமதி ராமநாதன் அழைத்த போது முதலில் தயக்கமாக இருந்தது. ஆனாலும் அஞ்சலைமீதிருந்த பயம் நீங்கி விட்டிருந்ததால் வசந்தா சட்டென கிளம்பிவிட்டாள்.

கோவில் வாசலில் கார் நின்றதும் திருமதி ராமனாதன் இறங்கிக்கொண்டாள்.
வசந்தாவிடம் ஐம்பதுரூபாயைக்கொடுத்து,”பூ பழம் வாங்கிவா.. கூட்டமாயிருக்கு..நான் இப்படி ஓரமாய் நிக்கறேன்..” என்றாள்.

வசந்தா கோவில் வாசலில் சிறு ஸ்டூல்மீது மூங்கில்தட்டைவைத்து அதில் பூச்சரத்தை பந்தாய் உருட்டி வைத்து வியாபாரம் செய்துகொண்டிருந்த பூக்காரிகளில் ஒரு பெண்மணியை நெருங்கி,”ரண்டுமுழம் மல்லிப்பூ ஒரு முழம் கனகாம்பரம் கொடுங்க..” என்றாள்.

“எத்தினி கேட்டீங்கம்மா?” என்று அன்பாய் கேட்டு நிமிர்ந்தவளைப்பார்த்தாள் வசந்தா. உடல் தளர்ந்திருந்தாலும் அந்த பெரிய கண்கள் அவள் யாரென்று காட்டிக்கொடுக்க,“அ ..அஞ்ச..?” என்று முடிக்கமுடியாமல் குழப்பமாய் கேட்டாள்.


அவளும் வெய்யிலில் கூசிய கண்களை இடுக்கிப்பார்த்துவிட்டு,”வசந்தாவா?” வியப்புடன் கேட்டாள்.

“ஆமாமாம் வசந்தாவே தான்” தைரியமாய் அழுத்தமாய் உரக்கவே சொன்னாள் வசந்தா.’இனிமே உன்கிட்ட என்னடி பயம்? உன் எல்லைல நான் இல்லை.. யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வராதாக்கும்?’

“டவுனுக்குபோயிட்டதா கேள்விப்பட்டேன்..புருஷனுக்கு கால் ஆபரேஷன்னு திடீர்னு போயிட்டியாமே..?”

“ஆமா...இதென்ன நீங்க உருக்குலைஞ்சி இப்படி இளைச்சிபோயிட்டீங்க? கம்பீரமா கசாப்புக்கடையில் வியாபாரம் செய்யாமல் கனக்காம்பரப்பூவும் மல்லிகையும் வித்திட்டு இப்படி இருக்கீங்க?” சற்று இளக்காரமாகவே கேட்டாள் வசந்தா.

ஹ்ம் என்று பெருமூச்சுவிட்டாள் அஞ்சலை.

பிறகு,”அய்ய அதையேன் கேக்கற ?...மூணுமாசம் முன்னாடி இதேப்போல ஒரு ஒருவெள்ளிக்கிழமைன்னு நெனைக்கிறேன், மதியம் ஒருகிளி என் வீட்டுவாசல் வேப்பமரத்துல வந்து குந்திக்கிச்சு... என்னடாஇது அதிசியம்னு நான் பாக்குறப்போவே என்சின்னமகன் மரத்துல நைசா ஏறி அதை லபக்குனு பிடிச்சான்..கீள குதிச்சான்.கிளி கீச் கிச்சுனு கத்திச்சி...”

அஞ்சலை சற்று மூச்சுவிட பேச்சை நிறுத்தினாள்.

’அடப்பாவி..அம்மாவும் மகனும்கோழிக்கறி முயல்கறி செய்யறமாதிரி கிளியை வெட்டி கிளிக்கறி செஞ்சி தின்னிங்களாக்கும்? அந்தப்பாவம்தான் உன்னை இப்படி உருக்குலைச்சி ஓரமா உக்காரவச்சிருச்சாக்கும்?’வசந்தாவின் மனம் பொறுமியது.

அஞ்சலை தொடர்ந்தாள்.

”நல்லவேளை கிளிக்கு ஒண்ணும் அடிகிடி இல்ல ..’ஏண்டா இருபத்திநாலுவயசு ஆவுது உனக்கு! உனக்கு விளையாட கிளிகேக்குதா?’ன்னு அவனைநாலு சாத்து சாத்திட்டு கிளியை கையில் வச்சிப்பாத்தேன்! நெசமா அளகு கொஞ்சினது!கூண்டுவாங்கி அதுல வச்சி பத்திரப்படுத்தினேன். இங்கீலீசுல வெல்கம் வெல்கம்னு சொல்லிச்சி..வெல்கம்மு்ன்னா தமிளுல நல்வரவாமே, கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டேன். கிளிக்கு அசைவம் ஆகாதேன்னு மறுநா வியாபாரத்தை நிப்பாட்டினேன்.கிளி எப்பவும் வெல்கம்வெல்கம்னு சொல்லிக்கிட்டே இருந்திச்சி...அப்படீன்னா இது தெருல யாரோட வளர்ப்புப்பிராணியா இருக்கணும்னு முடிவுகட்டினேன். உடனே கிளியை கவனமா எடுத்திட்டு தெருல எல்லாரையும் கேட்டேன்,’யாரு இந்தக்கிளியை என் வீட்டுக்கு அனுப்பினது?’ன்னு உரக்கவே கேட்டேன். ஒருத்தரும் வாய் தொறக்கல ..என்னுதுன்னு யாரும் சொந்தம் கொண்டாடல..நீயும் உன் புருஷனுக்கு கால் ஆபரேஷன்னு வெளியூரு போயிட்டதா கேள்விப்பட்டேன்.மேலும் உன்னுதா இருந்தா நீ விட்டுக்கொடுப்பியா ஒரு வாயில்லா பிராணியை வளர்த்த ஜீவனை விட்டுப்போற கொடூரக்கார மனசு தயிர்சோறு துன்னுற உனக்கு வருமா? வராது...நானும் என்கிட்ட அடைக்கலம்னு வந்த அந்த கிளிக்காக அது சைவப்பறவைங்கிறதால கவிச்சிகூட வீட்டுல செய்யாம இருந்தேன்.. ஆடுவெட்டாமகோழித்தலையை சீவாம வீட்ல ரத்தவாடையே இல்லாம வச்சிக்க ஆரம்பிச்சேன்.வியாபாரம் இல்லாம வீட்ல வறுமை சூழ்ந்திச்சி..ஆனாலும் என்னிக்காவது கிளிக்கு சொந்தக்காரங்க வருவாங்க அவங்க கையில் ஒப்படைச்சிச்சிடலாம்னு காத்திருந்தேன். அது என்ன சாப்பிடும்னு கேட்டு அதைத்தான் தந்தேன்..’அஞ்சலைனு என்பேரை சொல்லு’ன்னேன் அளகா அஞ்சல அஞ்சலன்னு என் பேரையும் கூப்பிட ஆரம்பிச்சிது.என்னவோ அதுபேர்ல பளகின பத்துநாள்ள பாசம் பொத்துக்கிச்சி.
வீட்ல சைவ வாடை அடிக்குதுன்னு மகன் சத்தம்போட்டான். ‘இல்லடா கிளிக்கு சொந்தக்காரங்க வருவாங்க அதுவரை சைவமா இருப்போமுடா..’ன்னு அவனை சமாதானப்படுத்தினேன் ஆனா படுபாவி போனவாரம் ஒருநா கடுவன் பூனைய வூட்ல சேர்த்து கிளியைக்கொல்ல வச்சிட்டான். பூனை கிளியைக்குதறிடிச்சி..துடிச்சிட்டேன் வசந்தா.என் இதயமே உடைஞ்சிபோயிடிச்சி.பாவிமகனை வூட்டைவிட்டே துரத்திட்டேன்.எனக்கு சோகம் தாங்கல..
அதான் கோயில் வாசல்ல வந்து செஞ்ச பாவத்துக்கு பிராயச்சித்தம் தேடிக்குறேன் வயித்தைக்களுவிக்க பூ வியாபாரம் செய்றேன்.. என் ஒடம்பு உருக்குலைஞ்சிபோனதைதான் கண்ணால பாக்கமுடியும் கிளியைப்பறிகொடுத்ததுல மனசு சிதைஞ்சி போயிருக்கிறதை சொன்னாதான் தெரியும். இப்போ நான் நடப்பொணமா ஆகிட்டேன்மா..நடப்பொணமா ஆகிட்டேன்..கிளியை வளர்த்தவங்க மட்டும் உடனே தேடிவந்து அந்தக்கிளியை வாங்கிப்போயிருந்தா அந்த வாயில்லா ஜீவனுக்கு இப்படி ஒரு நிலமை வந்திருக்குமா வசந்தா? ”

ஆற்றாமையுடன் அஞ்சலை கூறிமுடித்தபோது வசந்தாவிற்கு ஏற்பட்ட உணர்ச்சியை எழுத்தில் வடிக்க இயலுமா என்ன?
மேலும் படிக்க... "அடைக்கலம்.(வம்சி சிறுகதைப்போட்டி 2011)"

Friday, October 28, 2011

வைரத்தின் நிழல்கள்

கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு, சூரியன் எஃப்.எம் கவிதை போட்டியை நடத்தினார்கள் ‘வைரத்தின் நிழல்கள்’ என்ற இந்தப் போட்டிக்கு ‘பூமியை வாழவிடு’ என்ற தலைப்பில் கவிதைகளை எழுதி அனுப்ப வேண்டும் என்றும்



சிறந்த கவிதைகளை எழுதியவர்களுக்கு வைரமுத்து பரிசு வழங்குவார் என்று அறிவித்திருந்தார்கள்.

பரிசுபெற்ற சில கவிதைகளில் என்னுடையதும் தேர்வாகிவிட்டது!


கவிதையை முன்பு வலையில் இட்டிருந்தேன் இங்கே மறுபடி அதே கவிதை நிழல்!

பூமியை வாழவிடு!
*********************************


புன்னகையை முற்றிலும்
இழக்குமுன்னமே
எனக்குப் புதை குழி
தோண்டுகிறீர்கள்.

புகையிலைப் படுக்கையை
தயார் செய்து
ஆலைப் புகையிட்டு
பிளாஸ்டிக் மாலை அணிவிக்க
ஆயத்தமாகி விட்டீர்கள்!

என் கொடையாய்
ஆறுகளைத்தந்தேன்
அழகுமிகு சோலைகளை
அவனியில் உருவாக்கினேன்
பூலோக சுவர்க்கமாய்
பூமியை மாற்றினேன்
கனிகளை காய்களை
பயிர்களை வளர்த்தேன்
வனங்களை அமைத்தேன்
விலங்குஇனங்களுக்கு
அடைக்கலம் தந்தேன்


முன்னொருகாலத்தில்
இங்குஎன் குழந்தைகளான
ஆறுகளின்ஆராவரசத்தம் இருந்தன
பறவைகள் ஓயாத ஓசையுடன்
இலைகள் அடர்ந்த மரங்களில் வசித்தன.

வரப்பின் மீது அமர்ந்து
வாய்க்கு ருசியாய்
அயிரமீன்குழம்புடன்
வெங்காயம் சேர்த்த
வெறும்நீர்ச்சோறு உண்ட
வெள்ளந்திமக்களும்
வயலோடு உறவாடினர்

நாட்டுப்பற்றுகொண்ட
தியாகிகளையும்
தலைவர்களையும்
புலவர்களையும்
புரவலர்களையும்
நல்லோர்கள் பலரையும்
நயமுடன் கண்ட அன்னை நான்.

இன்று..

தர்மம் தலைகுனிகிறது
ஊழல் உற்சாக ஊற்றாய
ததும்பி வழிகிறது.
அஹிம்சை அழிந்து
அன்பும் மனிதநேயமும்
அற்பமாகிவிட்டது.
தீவிரவாதிகளுக்குப்
புகலிடமாய் இந்
பூமித்தாய் ஆகலாமா?.

என்னைக் கண்டபடி
கூறு போட்டு
அடுக்குமாடிக் கட்டிடங்களை
அண்ணாந்து பார்க்குமளவுக்குக்
கட்டிவிட்டீர்கள்.

என்கோபத்தை
சின்னக் குலுக்கலில்
சிறுபுருவ நெரிப்பில்
நியாயமாய் தெரிவித்தேன்
புரிந்து கொள்ளவில்லை நீங்கள்
அல்லது
புரிந்தும் புரியாதது போல்
அலட்சியமாய் இருக்கின்றீரோ?
இரண்டுமே மெய்தான்.
.
என் மூச்சு எங்கே எனத்
தேடுகிறீர்களா என்ன?
அதைத்தான்
கார்பன் மோனாக்சைடில்
பத்திரப்படுத்தி விட்டீர்களே!

தாயென்கிறீர்கள் என்னை
பேணிக்காக்கத்தான்
மறந்துவிட்டீர் மைந்தர்களே!


ஆறுகளை நீரற்ற சகதி
சேறுகளாக்கிவிட்டீர்,
விலங்கினங்களைத்துரத்தி
வனத்தினில்புகுந்து
வான் உயரக்கட்டிடங்கள் எழுப்ப
மானிடர்கள் வந்துவிட்டீர்கள்.


விட்டுவிடுதலையாகிப்பறந்த
சிட்டுக்குருவிகள் எல்லாம்
விஞ்ஞான முன்னேற்றத்தின் விளைவுகளில்
கண்கட்டுவித்தைபோல
காணாமல்போய்விட்டனவே!


ஓசோன் ஓட்டை ஆனதனால்
உலகின் வெப்பமும் கூடியதே!
பருவத்தில்பெய்தமழையை
வருமோஇனி மழை
என ஏங்கி நின்று
வான்பார்த்து
வருத்தத்தில்
வாடி நிற்கிறீர்கள்!


மேனியெங்கும் பாளம்பாளமாய்
வெடிப்புவந்து வேதனையுற்று
மூச்சுவிடவும் முடியாமல்
முனகும் இந்த பூமித்தாயினை
தவிக்கவிடும் மானிடரே!

எந்தையும்தாயும்
மகிழ்ந்துகுலாவி
இருந்த நாடென்று இதனை
உமது சந்ததியினருக்குக்
கைகாட்டிடவும்
பொய்யாய்க்கனவாய்
பழங்கதையாய்
பூமித்தாயின் வரலாறு
போகாதிருக்கவும்
புரிந்துகொண்டு வாழுங்கள்.

வெறும் வேஷமிட்டுவாழும்
வாழ்க்கையினின்றும்
வெளியே வாருங்கள்!

வேருக்குத்தான் நீர் தேவை எனும்
விவேகச்சிந்தனைஉங்களுக்கு
விரைவில்தானே வந்துவிட்டால்
பூமித்தாயாம் நானும்தான்
’பூமியைவாழவிடு’ என்று
பூகம்பமுழக்கமிடமாட்டேன்
பூப்போலே பூமண்டலத்தை
புரிந்து என்றும் காத்திடுவேன்!
********************************************************************
மேலும் படிக்க... "வைரத்தின் நிழல்கள்"

Monday, October 24, 2011

சார் என்கிற சாரங்கன்!(சவால் போட்டி 2011)

"எதுக்கு ..எதுக்கு என்னை இங்க கொண்டுவந்து கட்டிப்போட்டு வச்சிருக்கேள், யாரு நீங்கள்ளாம்? என்னைவிடுங்கோ நான்போகணும் அப்பாக்கு கோயில் கைங்கர்யத்துக்கு நான் இல்லேன்னா திண்டாடிப்போயிடுவார் தயவுபண்ணி என் கைக்கட்டுகளை அவிழ்த்துவிடுங்கோ...”


கண்ணில் நீர் தளும்ப முகுந்தன் இப்படிக்கதறுவதை வேடிக்கைபார்த்த குமரவேல்,”டேய் முகுந்தா...உன்னை ஒருமுக்கியமான விஷயத்துக்குத்தான் தூக்கிவந்திருக்கோம்..உன் ஊர் அனந்தரங்கபுரத்து அரங்கநாதப்பெருமாளுக்கு வைரத்திருவடி சேவைன்னு வருஷா வருஷம் நடப்பது நாளைக்கு நடக்கப்போவுதே, அந்த கைப்பிடி அளவுமட்டுமே ஆனால்முழுக்கமுழுக்க வைரக்கல்லுகள் பதிச்ச திருவடியைப்பத்திப்பேசத்தான் இங்க உன்னை கூட்டி வந்திருக்கோம்..” என்று கிண்டலாய் சொல்லி சிரித்தான்.

அரைகுறை வெளிச்சம் பரவி இருந்த இடத்தில் அப்போதுதான் மயக்க நிலையிலிருந்து முற்றிலும் மீண்டிருந்த முகுந்தன் குரலுக்குரியவனை நிமிர்ந்து பார்த்தான். சட்டென முகம் வெளிறினான்.

”நீ நீங்க...ஒருவாரமும் ஊர்ல எங்காத்துலதங்கி கோயிலையும் ஊரையும் சுத்திப்பார்க்க வந்த கோவிந்தாச்சாரி மாமாதானே?” என்றான் வியப்புடன்.

குமரவேல் ஹஹ் என் சிரித்துவிட்டு,” அந்தப்பேரை வச்சிட்டு நெத்தில நாமம் போட்டுக்கிட்டு வந்ததால்தான் உங்கவீட்டுல என்னை உள்ள விட்டீங்க..” என்றான் இடக்காக.

“அப்படில்லாம் இல்ல...யாராயிருந்தாலும் உதவின்னு தேடிவந்தா இரக்கப்படணும்னு என் அப்பா சொல்லுவார் அதைத்தான் செய்வார். கரூர் பக்கத்துல அமராவதி நதி புரண்டோடற அனந்தரங்கபுரம் கிராமம் ரொம்ப அழகா இருக்கு கோயில் அழகா இருக்கு மடியா சந்தியாவந்தனம் ஆராதனை பண்ணிண்டு தங்க சத்திரம் சாவடி ஹோட்டல்வேண்டாம்.நல்லதா ஓரிடம் வேணும்ன்னு நீங்க கேட்டுண்டதும் என் அப்பாதான் உங்கள எங்காத்துலயே தங்கசொன்னார்..நீங்களும் தினம் மடியா குளிச்சி பூஜைபண்ணிண்டு பாசுரம் சொல்லிண்டு பாட்டிகூட பேசிண்டு சகஜமா இருந்தங்களே..இன்னிக்கு விடிகார்த்தால குளத்துலகுளிக்க ஆசைப்பட்டு என்னை எழுப்பி கூட வரச்சொன்னேள் நானும் கூட வந்தேன்..ஆனா இங்க நான் எப்படி வந்தேன்? நீங்க என்ன பாண்ட் போட்டுண்டு தலைமயிரை பின்னாடி ஹிப்பியாட்டம் பரப்பிண்டு வாய்ல சிகரெட்டும் கையுமா நிக்கறேள்? நம்பவே முடியலயே?” என்றான் வெகுளியாக.

“பாஸ்! பையனுக்கு இருபத்திஆறுவயசு, ஒரு கைகுழந்தையும் இருக்குதுன்னு நீங்க சொல்றீங்க... இவனே மொழுமொழுக்குனு ஆப்பிளுக்கு கைகால்முளைச்ச மாதிரி பால்வடியும் முகமா இருக்கான்?இவன்கிட்ட விஷயத்தை கறக்கமுடியுமா?”குமரவேலின்காதில் கதிர் கிசுகிசுத்தான்.

“முடியணும்...என் கனவு அந்த வைரத்திருவடி.சாமியோட காலுல மாட்டற அந்த சின்ன ஒருஜோடி செருப்புகள்,பலகோடி பெறுமான வைரக்கல்லுகள் இருக்குது. சிலைக்கடத்தல் இளம்பெண்களைக்கடத்தல் போதை மருந்து கடத்தல் எல்லாம் அலுத்துடிச்சி...வருஷம் ஒருவாட்டி கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்னிக்குத்தான் கோயில் பாதாள ரூம்லேவச்சதை எடுத்து சாமிக்கு அணிவிச்சி மறுநாள் திருப்ப வச்சிடறாங்கன்னு கேள்விப்பட்ட நாலுவருஷமா பக்கா ப்ளான் போட்டுக்கிட்டுவரேன்.. இந்தக்குமரவேல், கோவிந்தாச்சாரியாய் ஒருவாரமும் அனந்தரங்கபுரம் கிராமத்துல இவன் வீட்டுல தங்கினதுக்குக்காரணம் இதான். எஸ்பி கோகுலுக்கு வாக்கரிசியா லம்ப்ப்சம் தரேன்னதும் அவனும் இதுக்கு ஒத்துழைக்கிறதா சொன்னதும்தான் திட்டம் நிறைவேறிடும்னு நம்பிக்கையே வந்திச்சி. நான் சொன்னபடி காலைல நீ காரோட குளம்பக்கம்வரவும்,இவனையும் கடத்த முடிஞ்சிச்சி..”

“என்ன.. குளத்துத்துல குளிக்கப்போலாம்னு சொல்லி என்னைக்கடத்திருக்கீங்களா? இதுவிஷயம் அப்பாக்குதெரியுமா அவர்கிட்ட ஒரு வார்த்தை சொன்னேளா?”

“ஆமா உன் அப்பா அம்மா பொண்டாட்டி கைப்புள்ள ஏன் உன்வீட்லகிடக்கே ஒரு தொண்டுக்கிளம் அதுகிட்டயும் சொல்லிட்டுக்கடத்தியாந்தோம்... போடாஆஆங்... ” என்றுகுமரவேல் சீறிவிட்டு ”ஆனாலும் முகுந்தா உன்பாட்டி யதுகிரிகிளவிகிட்ட பாசுரம் அதுஇதுன்னு நான் கஷ்டப்பட்டு நெட்ரு செஞ்சதை பாடிக்காட்டினதுல கிளவிக்கு என்பேர்ல பாசம் பொத்திக்கிச்சி.
“கோவிந்து ! காச்சல்ல செத்துப்போன என் மூணாம்பிள்ளை திருமலையாட்டம் இருக்கடா’ன்னு நெத்திமுகந்து நெருங்கிவர ஆரம்பிச்சிதுல இந்த வைரத்திருவடிபத்தி சின்ன ஹிண்ட் கொடுத்திச்சி ...அதை கோயில் பாதாள அறைல வச்சிருக்குது அதை எடுக்க நீயும் உன் அப்பனும் ஒரு காவலதிகாரியும் மட்டும் நெய்ப்பந்தம் எடுத்திட்டுப்ப்போவிங்கன்னு சொல்ல ஆரம்பிச்சதும் இப்படி பேச்சு கொடுத்தேனே....”

************************************************************8

பாட்டி அந்த வைரத்திருவடியை எங்கே பத்திரப்படுத்துவா?

லாக்கர் மாதிரிடா கோவிந்து், அதுலதான் வைப்பா.. அதுக்கென்னவோ கோட்வர்டு கீட்வார்டுன்னு இருக்குமாமே என்னவொ போ நான் என்ன கண்டேன்? முகுந்தன் தாத்தா, வரது இதப்பத்தி விவரம் சொல்லமாட்டா..கோயில் சொத்தோல்லியோ பரமரகசியமா இருக்கணும், அதான்...பரம்பரையா கோயிலுக்கு முறை எங்க குடும்பம் தான் செய்றது எங்காத்துக்காரர் போனதும் மூத்தவன் வரது கோயில்ல முறைக்குப்போறான்... முகுந்த்து கூட படிச்சிட்டு வெளியூர் வெளிநாடுனு வேலைக்கெல்லாம் போகாம அப்பாக்கு உதவியா கோயில் கைங்கர்ய வேலையே போதும்னு இருக்கான்.

வைரத்திருவடி!வைரப்பாதுகைதானே! இதுக்கு ஒருநாள் திருவிழா.. அதுக்கு இந்த சின்னகிராமத்துக்கு லட்சம்லட்சமா ஜனம் வராபோல்ருக்கே

ஆமாண்டா கோவிந்து..மத்தநாள்ள எண்ணி ஏழுபேர் வர கோயிலுக்கு வைரத்திருவடிசேவை அன்னிக்கு கொள்ளைஜனம் வந்துடும்.மந்திரிகள் வருவா சினிமாக்காரா வருவா டிவிக்காரா வருவா போன விச என்ன பேட்டி கண்டு குலம்தரும் பாசுரம் பாடசொல்லி சங்கரா டிவிலகூட போட்டாளே நீ பாத்தியோ? ஊரெல்லாம் அன்னதானம் நடக்கும் எங்காத்துல படிப்படியா சாதம் பண்ணிண்டே இருப்போம் வரவாளுக்கு போட்டுண்டே இருப்போம்...

சரி பாட்டி அந்த லாக்கரைத் திறக்கஉங்கபிள்ளை வரது, முகுந்தன் ரெண்டுபேரும் எஸ்பி கூட போவாளாஅவாளுக்கு லாக்கர்திறக்கிற விஷயம்லாம் தெரியும் இல்லையா பாட்டி?

பேஷா தெரியும்.. ஆனா போலீசுக்கு தெரியாது கூடப்போற எஸ்பி செத்த தள்ளிதான் நிப்பானாம் நடுல படுதாவேற போட்டுடுவா..முகுந்து லாக்கரைத்திறந்து பெருமாள் திருவடிகளை பட்டுத்துணியை கைல சுத்திண்டு கண்ணாலபாக்காம உத்தேசமா கைல எடுப்பான்.அதை கண்ணைக்கட்டிண்டு தலைல வரது வச்சிண்ட்ருக்கிற ஒருதங்கத்தாம்பாளத்துல் சேர்ப்பான். வரது அப்படியே நடந்து வந்து திருவடிகளை ஆழ்வார் சந்நிதிகளில் வச்சிட்டு சேவிப்பா. அப்புறம்தான் பெருமாள் திருவடிகளில் பூட்டுவா... எல்லாம் வரது ஒருநாள் பிரியாகிட்ட அவ ஆசையாகேட்டப்போ தயங்கிதயங்கி சொன்னதை நானும் கேட்டதுல பாதி காதுல விழுந்தது மீதி கேக்கல வயசாயித்தே..

லாக்கர் ஓபன் செய்றதெல்லாம் எப்படீன்னு சொல்லலையாக்கும்?

அதெல்லாம் சொல்லப்படாது.வரதுக்கும் முகுந்துக்கும் மட்டும் தெரியணும்..தெரிஞ்சிதான் நாம

என்னபண்ணப்போறோம் சொல்லு?காடுவாவாங்கறது வீடு போபோங்கறது..

்************************************************


“அம்பி.. இவ்வளோ விவரம் நானும் உன்பாட்டியும் பேசிட்டோம்..”

குமரவேல் எகத்தாளமாய் இப்படிச்சொல்லவும் முகுந்த்,கலவரத்துடன்,
.”ஐயோ இவ்ளோவிவரம் பாட்டிகிட்டேருந்து வாங்கிட்டேளா?” என்று அலறினான்.


”அதுமட்டும்போதும்னா உன்னை ஏன் இங்க கடத்திவந்திருக்கேன் ?பாட்டி சொல்லாததையும் சொல்லு..அந்த வைரதிருவடி வச்சிருக்கிற லாக்கரைத்திறக்க அங்க என்ன செய்யணும்? கோட்வேர்டு என்ன?”

குமரவேல் மிரட்டலாய் கேட்டான்.

”தெரியாது”

”உன்பொண்டாட்டி கைகுழந்தையை கொன்னுடுவேன் சொல்லலேன்னா..”

”பரவால்ல”

”உன் ஆத்தா அந்தக்கிளவியை க்ளோஸ் பண்ணிடுவேன்”

“பண்ணிக்கோ”

“உன் அப்பாவை கண்டதுண்டமா வெட்டி உங்க ஊர் கோயில்குளத்துலயே வீசிடுவேன்”

ஐயோ அப்பாவைஒண்ணும்செய்யாதீங்கோ.. சொல்லிடறேன்..சொல்லிடறேன்..

”பார்ரா கதிரு ... தசரதபுத்திரனாயிருக்கான்! சொல்லு சொல்லு..”

வேறு வழியின்றி முகுந்தன்விவரமாக குறியீடுகளை சொல்லிவிட்டான்.



அதைகுமரவேல் அப்படியே பேப்பரில் குறித்துவைத்துக்கொண்டான் .

பிறகு செல்போனில் ,”யாரு வரதாச்சாரியார் சுவாமிகளா? தேவரீர்கிட்ட சொல்லாம உங்கபுள்ளையாண்டானை அழைச்சிண்டுவரவேண்டியதாப்போச்சு காலம்பற கொளத்ல தீர்த்தமாடறப்போ எனக்கு சுளீர்னு ஹிருதயத்ல ஒரு வலி வந்து உடனே பக்கத்ல இருந்த முகுந்து தான் என்னை டவுன் ஆஸ்பித்ரிக்குக்கூட்டிண்டுவந்துருக்கான்..ஒண்ணுமில்ல பயப்பட ஏதுமில்லைன்னு டாக்டர் சொல்லிட்டார். செக் அப் முடிச்சிண்டு சாயந்திரத்துக்குள்ள அங்க வந்துடுவோம்.முகுந்த் தங்கமான பையன்.. லைன்க்ளியரா இல்ல என்ன கேட்டீங்க? எந்த ஆஸ்பித்ரியா அது அது...
வ .. வந்து...அடட்டா ஒண்ணும் கேக்கல சரி வச்சிட்றேன் அதான் நேர்லவரப்போறேனே.”

என்று பேசிமுடித்துவிட்டு முகுந்திடம்,”டேய்...ஊர்வந்து வாயைதிறக்கக்கூடாது. நாளைராத்திரி பாதாள ரூம்போனதும் உன் அப்பன் கண் கட்டி இருக்கும் நீதான் வழக்கம்போல லாக்கரைத்திறந்து அந்ததிருவடியை எடுக்கப்போறேன்னு உங்கப்பா நினைச்சிட்டிருக்க நீ கைகட்டி நிக்கணும். கூடவர்ர எஸ்பிகோகுல்கிட்ட நான் நாளைக்காலையில் நான் கொடுக்கப்போகிற இந்த உன் குறியீடுகளை வச்சி அவன் திறந்து திருவடிகளை எடுத்துப்பைலபோட்டுக்குவான்..வெறும் தாம்பாளத்தோட வெளில வந்து ஐய்யெயோ யாரோ லாக்கரைத்திறந்துகடத்திட்டான்னு நீ ஒப்பாரிவைக்கணும் தெரிஞ்சுதா? ஏதாவது குயுக்தி பண்ணி வைரத்திருவடியை எஸ்பிகிட்ட சேரவிடாம சொதப்பினியான்னா உன் அப்பனை கோயிலுக்குள்ளயே காவு வாங்கிடுவேன் ஜாக்கிரத”

“ஐய்யெய்யோ மாட்டேன் நீங்க சொன்னபடி செய்றேன் அப்பாவை ஒண்ணும் பண்ணாதீங்கோ ப்ளீஸ்..”

அனந்தரங்கபுரத்தில் வரது தன் வீட்டில் அனைவரையும் சமாதானப்படுத்திக்கொண்டிருந்தார்.”ஒண்ணுமில்ல வந்துடறாராம் கோவிந்தாச்சாரிக்கு சீரியசா இல்லையாம்..முகுந்த சரியான சமயத்ல அவரைகொண்டு சேர்த்ருக்கான் கொளத்துல கூட அவன் மட்டும் இல்லேன்னா என்னாறது?”

”அப்பனே அனந்த ரங்கநாதா! கோவிந்துக்காக உன் கோயில்ல வந்து விழுந்து அங்கப்ரதட்சணம் பண்றேன் ஆத்துக்குவந்தவா நல்லபடியா திரும்பிப்போகணும்” பாட்டி அழுதேவிட்டாள்.

வாசலில் சத்தம் கேட்டது.

”யாரு கோவிந்துவா பாருடி கனகா ?”

காரிலிருந்து ப்ரியாவின் அண்ணன் சாரங்கன் வந்திறங்கினான்.

"சாரங்கா.. வாடா வா எட்டுமைல்ல கரூர்லதான் இருக்கேன்னு பேரு ...உற்சவம்னாத்தான் அக்கா ஊருக்கு வரே நீ?இளைச்சிப்போயிட்டியேடாப்பா..கைல என்ன புது கெடிகாரமா? மூஞ்சில கல்யாணக்களைவந்துடுத்து...உனக்கென்ன சித்த கருப்பா இருந்தாலும் ராஜாமாதிரி இருக்கே...ஜோரா பொண்ணு கிடைப்பா..”

“போங்க பாட்டி உங்களுக்கு எப்பவும் கிண்டல்தான்..சரி எங்கே மிஸஸ்முகுந்த?”

”என்ன அ்திசியமா உன் தங்கயோட முழுப்பேரையும் சொல்லாம இப்படிக் கேக்கறே?பிரியா இருந்தா இத்தன்னாழி உன்னை வாசலுக்கே வரவேற்க வந்திருப்பாளே ..ரத்ததானமுகாம் ஒண்ணு உற்சவ டைம் ஏற்பாடு பண்ணூவாளோல்லியோ அதுசம்பந்தமா டவுனுக்குப்போய்ருக்கா.. சரி உன்னை திண்ணைலயே நிக்கவச்சி பேசறேன் உள்ளபோய் கனகா கையால்கள்ளிச்சொட்டா காபி வாங்கி சாப்பிடு..பிரயாணக்களைப்புபோய்டும்”

சாரங்கன் உள்ளேபோனவன் சுற்றுமுற்றும்பார்த்துவிட்டு ப்ரியாவின் அறைக்குள் நுழைந்தான்.
கதவை உள்ளே தாளிட்டுக்கொண்டான்.அங்கிருந்த மரமேஜைமீதிருந்த அந்த இரண்டு தாள்களையும் நோட்டமிட்டான். ஒன்றில்
"Mr.கோகுல்,
S W H2 6F இது தான் குறியீடு.. கவனம்
-விஷ்ணு"
'
என்றும்
இன்னொன்றில்
“"sir, கோகுலிடம் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன்..கவலை வேண்டாம்-
-விஷ்ணு"
என்றும் இருந்தன.



அப்போது அவனது செல்போன் பாக்கெட்டில் அதிர்வலைகளை அனுப்ப எடுத்துக்கையில் வைத்துக்கொண்டான்.திரையில் விஷ்ணு இன்ஃபார்மர் என்று தெரிந்தது.




சட்டென் ஆர்வமுடன்,”சொல்லு,விஷ்ணுப்ரியா! நான் சார்(ரங்கன்) தான்! இங்க தனியா உன் ரூம்ல இருக்கேன்.. நீ போன்ல விவரம் சொன்னபடி அந்த ரண்டு ப்ரிண்ட் அவுட் பேப்பரையும் உன் ரூம்ல பார்த்துட்டேன்.ஆமா , அந்தகோவிந்தாச்சாரி பத்தி நீ எப்படி கோகுல்கிட்ட விஷயத்தை கறந்தே ?”

” உன் தங்கை உன்னோட ப்ரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சீஸ் ல இன்ஃபார்மரா சேர்ந்ததுக்கு இப்படி வீட்டிலேயே உளவு பார்த்து துப்புதுலக்குவேன்னு கனவிலும் நினைக்கல...ஆமா சார்(ரங்கா)...அந்த கோவிந்தாச்சாரி முதல்ல ஆத்துல நுழையறப்போவே எனக்கு லேசா டவுட்தான்...ஒருநாள் அந்தாளு குளத்துப்படிக்கட்டுல எஸ்பிகோகுல்கூட கிசுகிசுன்னு பேசிட்டு நின்னதையும் தற்செயலாபார்த்தேன்..அப்போ எஸ்பி மேலயும் டவுட் வந்தது. ஆனா பாட்டியும் என்மாமனாரும் அவரைப் பு்கழ்ந்துதள்ளினாங்க..நானும் கரூர்ல உன் ப்ரைவேட் டிடெக்டிவ் ஏஜன்சீஸல இப்படி இன்ஃபார்மரா பார்ட் டைம்ல ஒர்க்பண்றதை முகுந்த் தவிர யார்கிட்டயும் சொல்லல...இன்னிக்குக்கார்த்தால குளத்துக்குப்போன முகுந்த் வரவே இல்லன்னதும் கொஞ்சம் திகிலானது,, ஆனா நெஞ்சுவலின்னு அந்த ஆளே போன்லபேசினதும் கட் செய்ததும் நாங்க அந்த நம்பர்லபேச ட்ரை செய்தப்போ கிடைக்காமல்போனதும் என் டவுட்டை அதிகப்படுத்தினது. கோவிந்தாச்சாரி எதுக்காக நம் ஊருக்கு உற்சவ நேரமா வந்திருக்கான்னும் என்னால் யூகிக்கமுடிஞ்சது. அதான் உன்கிட்ட மட்டும் எஸ்பிகோகுலைப்பார்த்து லாக்கர் குறியீடைக்கொடுத்திட்டு முகுந்தைக்காப்பாத்தப்போறேன்னு அவசரமா மெயில் செய்தேன்.நீ நிஜமாவே நான் அப்படிநான் கொடுத்திடப்போறேன்னு நினைப்பாயோன்னுதான் உன்னை வீட்டுக்கும் வரச்சொல்லியிருந்தேன்.கோகுல்கிட்ட கொடுக்கப்போற ப்ரிண்ட் அவுட் தாளில் ஒண்ணு உனக்கும் வைச்சேன்.
டவுன்போயி எஸ்பியை வீட்டில் பார்த்தேன்.

முதல்ல எஸ்பிகோகுல் போலீஸ் அதிகாரியாய் பந்தாவாய் என்னை வீட்டுக்கெல்லாம் வந்ததுக்கு அதட்டினான்.அப்புறமா கோவிந்தாச்சாரி அனுப்பினதா சொல்லி ப்ரிண்ட் அவுட் செய்த அந்த தகவல் தாளைக்கையில்கொடுத்ததும் கொஞ்சம் அடங்கினான்.நம்பினான். நானும் திட்டமிட்டபடி நடிக்க ஆரம்பிச்சேன்.

” கோவிந்தாச்சாரி போனில்,’ஏய்ப்ரியா உன் புருஷன் என்ன அடிச்சாலும் அந்த லாக்கர் கோட்வர்ட்பத்தி வாயத்திறக்கல ...உனக்கு உன் மாமனார் எல்லாம் சொல்லி இருப்பதா ஒருநா பாட்டி என்கிட்ட சொல்லிட்டா..மரியாதையா அதை நீ கோகுல்கிட்ட தெரிவிக்கணும் அதை அடுத்த அரைமணில உன்கிட்ட நான் கன்ஃபார்ம் செஞ்சிக்குவேன்..சிம்கார்டு மாத்திக்கிட்டே இருப்பேன் அதனால நீ பேச முயற்சிக்கவேண்டாம்..என்னைபோலீஸ்ல காட்டிக்கொடுக்க நினைக்காதே.மீறினால் உன் புருஷனை இங்கயே கொன்னு புதைச்சிடுவேன்‘னார்..எனக்கு கோயில் சொத்து எப்படியோ போகட்டும் என் புருஷன் தான்முக்கியம்”னு கதறி அந்த தாளைக்கொடுத்தேன்பாரு அந்த எஸ்பி மூஞ்சில ஆயிரம்வாட்ஸ்பல்புதான்!”

“ஓ அப்புறம் என்னாச்சு?”

“ அப்புறன் என்ன..’வெரிகுட்..நல்லவேளை செல்போன்ல நீ இதைப்பேசாமல் வீடுதேடிவந்தியே...ஆமா இதென்ன விஷ்ணுன்னு எழுதி இருக்கே?” அப்படீன்னான் கோகுல்.

“என்முழுப்பேரு விஷ்ணுப்ரியா..டவுட்டுன்னா பாருங்க ஐடி கார்டு”

“ஒகே சரிம்மா விஷ்ணு ப்ரியா..தட்ஸ்குட்..நானும் அந்த குமரவேலும் தவறிப்போய்க்கூட எதையும் போனில் பேசிக்கமாட்டோம்..ஏன்னா இப்போல்லாம் ஈசியா மாட்டவைக்கிறதே போன் உரையாடல்கள்தான்..நீ போம்மா...முகுந்த் உயிருக்கு நான் க்யாரண்டி”ன்னான் .

’முதல்ல உன் உயிரைக்காப்பாத்திக்கோடா முட்டாள்.உன் வண்டவாளத்தை டிஜிபி கிட்ட தண்டவாளத்துல ஏத்திட்டுதான் இங்க வந்திருக்கேன் .....’ன்னு மனசுக்குள்ள புலம்பிக்கிட்டேன் ..

அந்த குமரவேல்,கண்டிப்பா முகுந்தை பயமுறுத்தி லாக்கர் திறக்கும் கோட்வேர்ட்ஸ்களை சொல்லவச்சிருக்கலாம். அதனால்தான் அவன் முகுந்தோட வீட்டுக்குவரதா தைரியமா சொல்றான். ஆனா அவனுக்குத்தெரியாது கோயில் உற்சவத்துக்கு வந்திருக்கிறகூட்டம் மாதிரி வீட்டில் டிஜிபி செல்வநாதன் அனுப்பின ஸ்பெஷல்போலீஸ் மஃப்டில கொஞ்சநேரத்துல அங்க வந்துடும்,.அவனை வீட்டில் நுழைஞ்சதும் சுத்திவளைச்சிப்பிடிச்சிடும்னு.குமரவேல் நீண்டநாளா
பலகுற்றங்கள் செய்து சட்டத்தின் பிடிக்கு அகப்படாமல் தப்பிக்கிறவன் என்பதை டிஜிபி சொன்னதும் அவன் ஒருவாரமா வீட்டில் ஃப்ரீயா வளைய வந்ததை நினச்சி ஒருநிமிஷம் ஆடிப்போய்ட்டேன் சார்! எனி வே..எல்லாம் முடிவுக்குவரப்போ்றது”

“க்ரேட் விஷ்ணு(ப்ரியா)!ரியலி ஐயாம் ப்ரவுட் ஆஃப் யூ!” என்று பேசிமுடித்த சாரங்கனை பாட்டி கூடத்திலிருந்து அழைத்தாள்.

” சாரங்கா..உற்சவத்துக்கு திடீர்னு பெரிய கூட்டமா முப்பதுநாப்பதுபேர் கூடத்துல வந்திருக்காடாப்பா ,, பெரிய மனுஷாளா இருப்பா போல்ருக்கு..இங்கிலீஷ்ல பேசிக்கிறா... எனக்கும்கனகாக்கும் என்ன இங்கிலீஷ் தெரியும்?பிரியாவும் இல்ல.. நீயாவதுவந்து அவாகூட பேசிண்டு இரேன் ..”
**************************************************************************************








.
மேலும் படிக்க... "சார் என்கிற சாரங்கன்!(சவால் போட்டி 2011)"

Friday, October 21, 2011

சின்னவளை முகம் சிவந்தவளை!


ஐஸ்வர்யாரா்ய்க்கு வளைக்காப்பாம்!
ஆஹா உலக அழகின்னாலும் சில சம்பிரதாயங்களை விடறாங்களா பாருங்க!

ஆனாலும் இந்தவளை இருக்கே இது ரொம்பகாலமா வளையவருதுன்னு நினைக்கிறேன். தலைவன் நினைவில் மெலிந்த தலைவிக்கு வளையல் ஒட்டியாணம் ஆகிவிட்டதாம்! மோதிரம் வளையல் ஆகிடிச்சாம்,,,காதலின் மேன்மையை சொல்ல அந்த நாளில் புலவர்கள் கற்பனை கொடிகட்டிப்பறந்திருக்கு...

இருங்க வளைகாப்பை முடிச்சிட்டு இலக்கிய வளையத்துக்கு வருவோம்!

வளைகாப்புக்கு நிறைய பெண்கள் கூடி, கர்ப்பவதிக்கு மூத்த சுமங்கலிகள் வளையல் போடுவார்கள். இதற்கான காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், "எங்களை எல்லாம் பார்...ஆளுக்கு அரைடஜனுக்குக்கம்மி இல்ல. செல்வத்துள் செல்வம் மழலைச்செல்வம்தான்! என்னது எப்படித்தான் பெத்தீங்களோன்னு கேக்கறீயா அதுக்கென்னடிம்மா மரம்வச்சவன் தண்ணி ஊத்தாமலயா போவான்?அப்படியாப்பட்ட அனுபவசாலிகள் உன் முன் நிற்கிறோம்?! நீயும் உன் பிரசவத்தை சுலபமாக கடப்பாய்...தைரியமாக இரு!" என்ற பெருமிதமான துணிவைத்தரும் வார்த்தைகளும் வளைகாப்புப்பெண்ணுக்கு பிரசவ பயத்தைப்போக்க உதவியா இருக்கலாம்!




இந்த வளையல்கள் ஏற்படுத்தும் அதிர்வு ஓசை, கருவில் வளரும் குழந்தைக்கு நல்ல தாலாட்டு. நம் தாய் நம்முடன் இருக்கிறாள் என்று குழந்தைக்கு அது கொடுக்கும் பாதுகாப்பு உணர்வு, அழகானது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

முன்னெல்லாம் வளைகாப்புக்கு







வளையல்காரரே இப்படி பொட்டியோட ஆஜராகிடுவார்.அன்னிக்குக்கண்ணாடிவளையல்களுக்குத்தான் அமோக வரவேற்பு.

ஹைதராபாத்ல சார்மினார்பகுதில வளையல் கடைகள் கண்ணைக்கட்டுது.மதுரை மீனாட்சி கோயில் வாசல் கடைகளில் எத்தனைவிதமான வளையல்கள் ! உடைக்கு மேட்சிங்கா வளை போட்டா அதுவும் ஓர் அழகுதான்.

ஒரு சமையல்காரம்மாவை அவங்கவேலை பார்த்தவீட்ல தங்க வளை திருடினதா சந்தேகப்பட்டாங்க.அந்தம்மா கணவனை இழந்து மகனைப்படிக்கவைக்க கஷ்டப்பட்டு உழைக்கிற ஏழைவர்க்கம். அவங்க தான் எடுக்கலைன்னு சொல்லியும் போலீஸ் ஸ்டெஷன்ல இழுத்துட்டுப்போய்ட்டாங்க அன்னிக்கு மாலை காலேஜிலிருந்து பொண்ணுவந்து தான் காலேஜ்ல ஏதோ பாரம்பரிய விழா அதுக்கு வழக்கமா கைல ப்ரேஸ்லெட்போடறதுக்கு பதிலா அம்மாகிட்ட சொல்லாம அவங்க கழட்டிவச்சிருந்த ஆறு தங்கவளையலையும் மாட்டிட்டுப்போனதா சொல்லிட்டு சமையக்காரம்மாகிட்ட ஸாரி கேட்ருக்கா.

அந்தம்மா அந்த வீட்டு வேலையைவிட்டுவேற ஊரே போய் ரொம்ப க‌ஷ்டப்பட்டு தையல்கத்துக்கிட்டு தையல்மெஷின்ல எம்ப்ராய்டரிலாம் செய்து ரெடிமேட் ட்ரெஸ் விதவிதமா தைச்சி இன்னிக்கு பெங்களூர்ல பெரிய ரெடிமேட் ஆடையகம் வச்சிருக்காங்க அவங்களோட இடது்கைலமட்டும்வாட்ச் இருக்கும் வலதுகைவெறிச்சினே இருக்கும்.
கன்னட சமூக அமைப்பு ஒண்ணுக்கு விருந்தினரா வந்த அவங்கள எழுத்தாளரான என்னை அந்த அமைப்பு அறிமுகம் செய்துவைச்சாங்க.. அப்போ பேச்சுவாக்கில நான் தயக்கமாய் கேட்க அவங்க இந்த சோகக்கதையை சொல்லிட்டு,” ஆமாம் ஷைலஜா.அப்போ ரப்பர்வளைதான் போட்டிருந்தேன் அப்புறம் மகன் படிச்சி பெரிய ஆளாயிட்டான் நானும் பிரபல தொழிலதிபர் ஆகிட்டேன் வைரவளையே வாங்கிக்கலாம்தான்.ஆனாலும் அன்னிலேருந்து நான் வளைபோடறதையே விட்டுட்டே்ன்..”

ஆறாத வடு அவர் மனசில் இருப்பதை பேச்சில் தெரிஞ்சிக்கமுடிஞ்சிது.



சமீபத்துல ஒரு செய்தி படிச்சேன்..
‘தென்னிந்தியாவில் உள்ள பல ஜி.ஆர்.டி ஷோரூம்களிலும் வளையல் திருவிழா.

விழாவின் ஒரு பகுதியாக, தினந்தோறும் வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் உயரமாக வளையல் அடுக்கும் போட்டி நடத்தப்பட்டது.

இதில் அதிக எண்ணிக்கையில் வளையல்களை ஒன்றன் மீது ஒன்றாக வரிசையாக அதிக உயரத்துக்கு வளையலை அடுக்குபவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு 6 கிராம் எடை கொண்ட தங்க வளையலை பரிசாக வென்றனர். இந்த 6 கிராம் எடை கொண்ட ரூ.16,500 மதிப்புடைய தங்க வளையலை 216 பேர் வென்றுள்ளனர்.

இந்த போட்டியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.(இவங்க வீட்டில பாத்திரம்பண்டத்தை அடுக்கிவச்சிருப்பாங்களா) வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்ற இந்த வளையல் திருவிழாவில் 216 பேர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றே போட்டி யாளர்களுக்கு , தங்க வளையல் பரிசளிக்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள ஜி.ஆர்.டி. ஜூவல்லரியில் நடைபெற்றது.’

மக்களை எப்படில்லாம் வளைச்சிப்போடறாங்க பாருங்க!
ஆனாலும் தங்கவளை கையில் எவ்வளோ போட்டாலும் எவ்வளோ கையை மேடைலபேசறமாதிரி ஆட்டிப்பேசினாலும் அது சத்தமே போடாது.கவரிங்வளை நாலுபோட்டீங்கன்னா போதும் அவ்ளோதான் ஊருக்கே நம்ம வருகையை பராக் சொல்லிடும்.இதிலிருந்து என்ன தெரியுது உன்னதங்கள் அமைதியாய் அடக்கமாய் இருக்கும்னுதானே?!


வளை சங்கு என்ற பெயரிலும் பழைய இலக்கியத்தில் இருக்கிறது. வளை கழன்றுவிழுதலை இலக்கியங்கள் பல சுவையாக சொல்லி இருந்தாலும் இந்த ஆண்டாள் கொஞ்சம் அதிகாரமாகவே சொல்லிருக்கா பாருங்க..

‘அவர் தன் கையில் ஒரு சங்குவச்சிருக்கார் அதைமிகபத்திரமாக வச்சிருக்கார்.வேற யார்கிட்டயும் எந்த சந்தர்ப்பத்திலயும் கொடுப்பது கிடையாது என்னுடைய கையில் இருக்கும் சங்கும் எனக்குப்பிரமாதம்தான்.. அ்ப்படி இருக்க அவர்(அரங்கநாதர்) எப்படி என் சங்கை பறிச்சிக்கலாம்?”

தாம் உகக்கும் தன் கையில்
சங்கமே போலாவோ?
யாம் உகக்கும் எம் கையில்
சங்கமும் ஏந்திழையீர்?

என் சங்கு என்று சொல்லாமல் எம் சங்கு எண்ரு தோழிகளிடம் சொல்வது நாகரீகமாய் இருக்கிறது பாருங்க... ஆண்டாள் மட்டுமில்ல கவிதைகளில் பலபெண்கள் வளைகழன்றதை வளை பறித்ததாகவேதான் கூறுவார்கள். இன்னும் அழுத்தமாக என் கைப்பொருள்களைக்கவர்ந்துகொண்டான் என்பார்கள் கைப்பொருள்கள் என்பது சங்குவளையல்கள்தான்.


கைப்பொருள்கள் முன்னமே
கைக்கொண்டார் காவிரிநீர்
செய்ப்புரள ஓடும்
திருவரங்கச்செல்வனார்
(செய்=வயல்_)

மாத்தத்தன் என்று ஒருவன் தெருவழியேபோனானான் அவனை எத்தனையோபெண்கள் பார்த்தார்களாம்(பொண்ணுங்களும் சைட் அடிச்சிருக்காங்க அந்த நாளில்(லும்) எல்லோருக்குமே அவன்மேல்மோகம் உண்டாகிவிட்டதாம் அவன் அடுத்ததெருவுக்குத் திரும்பும்போது எல்லாப் பெண்களின்வளையல்களையும் ஒருமிக்க பறித்துப்போய்விட்டானாம் இதைஒருபெண் சொல்கிறாள் ,,,

இருந்தவளை போனவளை
என்னை அவளைப்
பொருந்த வளைபறித்துப்போனான்-பெருந்தவளை
பூத்தத்த தேன் சொரியும்
பொன்னிவளநாடன்
மாத்தத்தன் வீதியிலே
வந்து,,’

பெரிய தவளை(இங்கயும் வளை பாருங்க) பூக்கள்மீது தாவிக்குதிப்பதால் மலர்களில் உள்ள தேன் சிந்துகின்ற காவிரிபாயும் செழிப்பான சோழநாடாம்!
இது பிற்காலப்பாட்டுஎன்பார்கள்.




ஐங்குறு நூறுல இந்தப்பாட்டுல

வலம்புரி உழுத வார்மணல் அடைகரை
இலங்குகதிர் முத்தம் இருள்கெட இமைக்கும்
துறை கெழு கொண்க நீ தந்த
அறை புனல் வால்வளை நல்லவோ தாமே.


வலம்புரி – right-twisted conch-shells, உழுத – whorl, வார் மணல் – long sandy, அடைகரை – sand filles shores, இலங்கு கதிர் – shining rays, முத்தம் – pearls, இருள் கெட – removing darkness, இமைக்கும் – shining, துறை கெழு கொண்க – lord of the splendid seashore, நீ தந்த – what you gave, அறை – fast waves, புனல் – moving water, வால் வளை – white bangles, நல்லவோ தாமே – are they better

Lord of the sandy seaport
where right-twisted conch shells
whorl in the long sandy shores,
and where shining rays of pearls
remove darkness!
Are the white bangles from the moving waves
that you gave her
better than the ones you gave her before?

என்ன நடுல பீட்டர்விடறேனேன்னு பாக்கறீங்களா கான்வெண்ட் கண்மணிகளும் படிக்கிறாங்க இல்லே?!

இந்தப்பொண்ணு பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா பாடறா பாருங்க அவன்பேரில் அவ்வளவு காதலாம்!

' பாண்டியனைப் பார்க்காமல், நான் மேலும்மேலும் மெலிந்துகொண்டேபோனால், என்னுடைய சங்கு வளையல்கள் கீழே விழுந்து, உடைந்துவிடுமோ என்ற பயத்தில், அந்த வலம்புரிச் சங்கு சரியான நேரத்தில் ஒலித்து, அதன் இனமாகிய வளையல்களைக் காப்பாற்றிவிட்டது !'


செய்யார் எனினும் தமர்செய்வர் என்னும்சொல்
மெய்யாதல் கண்டேன் விளங்கிழாய் கைஆர்
வரிவளை நின்றன வையையார் கோமான்
புரிவளை போந்துஇயம்பக் கேட்டு.

(செய்யார் - (உதவி) செய்யமாட்டார்கள்
தமர் - தமக்கு உரியவர்கள் / உறவினர்கள்
விளங்கிழாய் - ஒளி மிகுந்த ஆபரணங்களை அணிந்த பெண்ணே
ஆர் - நிறைந்துள்ள
வரி வளை - நீண்ட வளையல்கள்
வையையார் - வைகை ஆறு
புரிவளை - வலம்புரிச் சங்கு
போந்து - வந்து
இயம்ப - சொல்ல)

குறளிலும் வளையல்கள் கழன்று தோள்கள் மெலிய, அவரைக் கொடுமையானவர் என்று அவை நொந்து பேசுவதைக் கேட்டு நான் வருந்துகிறேன் என்று தலைவி சொல்லுவதுபோல இருக்கும். அந்தக்குறளை இங்க எடுத்து அளிக்கிறவங்களுக்கு தீபாவளிக்கு செய்யப்போற மைபா அளிக்கப்படும்!


சங்கு லாமுன்கைத் தையலோர் பாகத்தன்
என்கிறதுதிருவாசகம்,

உந்துமதகளிற்றன் என் ஆரம்பிக்கும் திருப்பாவையில் சீரார்வளையொலிப்ப என்று வரும்.
சூடகமே தோள்வளையே என்கிறது இன்னொரு திருப்பாவையில். சூடகம் என்றால் கைவளை.ச்சூடி ஹிந்தில வளை. மொழிகளுக்குள் வளை எப்படியெல்லாம் வளையவருது பாருங்க!

வளையல்கள் பெண்களின் வாழ்க்கையோடு வருகின்றன.அது ஒரு மங்கலச்சின்னம் என்பதால்
கணவன் இறந்ததும் வளையைக்கழற்றிவைத்துவிடுகிறார்கள் இப்போதும் சிலபெண்கள். கண்ணாடிவளையல்களை கணவனை இழந்தபெண்களின் கைகளிலிருந்து உடைத்து எடுப்பது ஒருசாரார் வழக்கமும். இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா ஒழிஞ்சிட்டு வருவதில் நிம்மதி.

கன்னடத்துல வளைக்கு பளே (bale)என்பார்கள்.
உங்கதமிழ்ல எப்படி ஒரு ப , ஒரு த, ஒரு க ,ஒரு ச என்று வச்சிட்டு சமாளிக்கறீங்கப்பா ?’என்று பல கன்னட சிநேகிதிகள் வியப்பாக கேட்பார்கள். கோடு போட்டா ரோடுபோடும் நம் பெருமையை நாம் உணர்வோம் அவர்கள் அறிய வாய்ப்பில்லை !


கர்னாடகாவில் திருமணமான பெண்கள் கண்டிப்பா கண்ணாடிவளைபோட்டே தீரணும்..இப்போ நூல் இழையாய் ப்ரேஸ்லெட் தான் இளம்பெண்கள் கையில்! குஜராத்தில் வங்காளத்தில்கூட வளையல்கள் பிரசித்தம்...இன்னமும் இருக்கும் அதிகம்விவரம் தெரியவில்லை.





சின்னவளை முகம் சிவந்தவளை நான் சேர்த்துக்கொள்வேன் வளையிட்டு என்னவளை காதல் சொன்னவளை என்கிற ஒரு பழையபாட்டுல ஏகப்பட்ட வளை வரும்.

பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத நான்
வளைகொண்ட கையாலே மெதுவாக மூட - என்
கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக நான்
பறந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற(நான் மல்ரொடுதனியாக)


வளையோசை கலகலவென

எங்கெல்லாம் வளையொசைகேட்கின்றதோ அங்கெல்லாம் என் ஆசைபறக்கின்றது

இந்த வளைக்கையில் வளையல்கள் நானல்லவா
இன்று வளைக்கையை வளைக்கின்ற நாளல்லவா

சுகம் வளைக்கையை வளைக்கயில் உண்டானது
மெம்மேலும் கைவளை வளை என்று ஏங்காதோ






இன்னும் வளைப்பாட்டு நிறைய இருக்கும். தெரிஞ்சவங்க இங்கபகிர்ந்துக்கலாமே!

சுத்திவளைச்சி எழுதாமல் சுமாரா படிக்கிறமாதிரி எழுதிமுடிச்சிட்டேன்னு நினைக்கிறேன்.
இதுக்கே உடன்பிறவா சகோதரர்களான மௌலி(மதுரையம்பதி) ஆயில்யன்(கடகவலைவச்சிருப்பதால் கடகவளைபோடலாம்)அம்பி தக்குடு விஜு கே ஆரெஸ் ஜமால் சுபைர் ஜீவ்ஸு சென்ஷி லக்கி ஷாஜ்கான் இப்னு ப்ரசாத் குட்டி டின், பெரியடின்(முகிலன் தினேஷ்குமார்) விழியன் ஜோசப் .காமேஷ் கந்தவேல்ராஜன்இன்னும் அவசரத்துல மறந்துபோன மற்றவர்களும்..் அக்காவுக்கு ஜம்னு வைரக்கல் பதித்த வளையல் வாங்கப்போறாங்கன்னு என் வலைப்பூ கிளி ,கூவிக்கிட்டே இருக்கு!கூவிக்கிட்டே இருக்கு, கூவிக்கிட்டே இருக்கு!!!!
மேலும் படிக்க... "சின்னவளை முகம் சிவந்தவளை!"

Sunday, October 16, 2011

உயிர்ப்பு.

"வாங்க கவிஞரே!”

ஆகாஷ் தெருமுனைக்கே ஓடிவந்து என்னை வரவேற்றான்

பைக்கை ஓரமாய் நிறுத்திவிட்டு அப்போதுதான் வெளியே இறங்கிய நான் புன்னகையுடன்,”என்னடா கவிஞரே கிவிஞரேன்னுட்டு? நான் என்னிக்கும் உன் நண்பன் அஞ்சனவண்ணன் தான்!” என்றேன்.

“ஆனாலும் சினிமாக்கெல்லாம் பாட்டெழுத ஆரம்பிச்சிட்டே...சமீபத்துலவந்த ‘தயக்கம் என்ன’படத்தின் பாட்டு உன்னை உலகத்துக்கே அடையாளம் காண்பிச்சிடிச்சே?போனமாசம் அமெரிக்காக்கு பிசினஸ் விஷயமா போன இடத்துல ஒரு தமிழ்க்குடும்பம் நடத்தின பார்ட்டில உன்னைப்பத்தித்தான் புகழ்ந்து பேசினாங்க...’இளம் வயசாயிருக்குதே இப்போவே இப்படி கலக்கறாரே?’ன்னு ஆச்சரியப்பட்டாங்க அவங்ககிட்ட நானும் பெருமையா நீ என் கல்லூரிநண்பன்னு சொல்லிக்கிட்டேனாக்கும்!”

“ஆஹா கோடீஸ்வரர்,பெரிய சாஃப்ட்வேர்கம்பெனி எம்டி ஆகாஷ் அவர்கள் இப்படி சொல்லறதைக்கேட்க ஆனந்தமா இருக்கே...அதிருக்கட்டும் ஏன் ஆகாஷ் இப்படி ஊருக்கு வெளிலபுறநகர்ப்பகுதில புதுவீட்டைக்கட்டி இருக்கிறே? சென்னையைத் தாண்டி ரொம்பதூரம் வந்த உணர்வாயிருக்கு.. அதான் செல்போன்ல உன்கிட்ட வழிகேட்டுட்டே வந்தேன் நீயும் சரியா என்னை தெருமுனைல வந்து பிடிச்சிட்டே...”

”ஆமா புதுசா வரவங்களுக்குக் கொஞ்சம் க‌ஷ்டமான இடம்தான் இது. என்ன செய்றதுடா அடிக்கடி வெளிநாடுபோய்வந்ததுல எனக்கு அந்த நாட்டுகட்டிடக்கலை பிடிச்சிபோச்சிடா. அதிலும் குறிப்பா அமெரிக்காவை சொல்லணும் நியூயார்க் வாஷிங்டன் தான் பெரும்பாலும் போவேன். அங்கே வீடுகளை பார்த்து வியந்துபோய் அதேபாணில இங்க கட்டணும்னு் பலநாள் ஆசை. இப்போ அதை நிறைவேத்திட்டேன் ....இன்னிக்கு க்ரஹப்ரவேசமும் முடிச்சிட்டா சீக்கிரமா குடிவந்துடுவோம். சரி சரி,, பூஜை ஹோமம்னு எல்லாம் நடக்கப்போகுது.. வாவா..வந்துவீட்டை நல்லா சுத்திப்பாரு. கவிஞன்கண்ணுக்குத்தான் கலை உணர்வு அதிகம்னு சொல்வாங்க...சரிடாஇனிமே உன்னோடு ரொம்ப நேரம் செலவழிக்கமுடியாதுன்னு நினைக்கிறேன்.. ஆளுங்கவந்திடே இருப்பாங்க..ஆங்.. இப்போவே சொல்லிட்டேன் பூஜை எல்லாம்முடிச்சி இருந்து நிதானமா சாப்பிட்டுப்போகணும் என்ன?”
என்று சொல்லியபடியே என்னை புதுவீட்டுவாசலுக்குக்கொண்டுவிட்டான்.


வீடு என்றா சொன்னேன் தவறு அரண்மனைபோல பெரிதாகத்தெரிந்தது.எப்போதோ மைசூர் அரண்மனையைத்தான் நேரில்பார்த்த நினைவு.

அரண்மனைக்குள் காலடி எடுத்துவைக்கிறேன். காலடியில் வித்தியாசமாக மரத்தரை வழுவழுத்தது.

“சுவர்லாமும் மரம்தான்! அமெரிக்கால இப்படித்தானாம் முழு வீடே மரத்தால் கட்டுவாங்களாமே ! நம்ம ஆகாஷ் அச்சுஅசலா அமெரிக்கா வீடுபோல மரத்தாலியே இழைச்சி இழைச்சி புதுமாதிரியாஅசததலா வீடுகட்டி இருக்கான் பாருங்க! “
ஆகாஷின் உறவினர்போலும் யாரோ ஒருமுதியவர் யாரிடமோ பிரமிப்புநிறைந்தகுரலில் சொல்லிக்கொண்டிருந்தார்.

.




ஜன்னல் கதவு உத்தரம் தரை சுவர் மேஜை நாற்காலி கட்டில் மேடை என்று எங்கும் மரம் செத்துக்கிடந்தது. ஆமாம் உயிரோடுள்ள மரத்தை வெட்டியதும் செத்தமரங்கள்தானே இதற்கெல்லாம் பயன்படுமாம்?

ஏற்கனவே நகரங்களை விரிவுபடுத்துவதாக சொல்லி காடுகளை அழித்துவருகிறோம் சாலைமரங்களை பாதை விரிவாக்க வெட்டிசாய்க்கிறோம்.அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் இயற்கைவளம் அதிகம் மக்கள்தொகைகுறைவு.அந்த நாட்டு தட்பவெட்பத்திற்கு வீடுகள் அப்படி தேவையாய் இருக்கலாம்.நமது தேசம் அப்படிப்பட்டதில்லையே?

பூமியில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி. இவ்வாறு இருந்தால் நமக்கு கிடைக்கும் பயன் அதிகம். காடுகள் மழையைத் தருவதுடன நிலச்சரிவைக் கட்டுப்படுத்துகிறது. மண் அரிப்பை கட்டுப்படுத்துகிறது. கரியமில வாயுவை நிர்ணயம் செய்யும் தன்மை மரங்களுக்கு உள்ளது. புவியின் தட்பவெட்பத் தன்மையை நிர்ணயிக்கும் காரணிகளாக காடுகள் உள்ளன.



மரங்களைக்காக்கவேண்டிய நாம் அவைகளை அழித்து இப்படி வீட்டுக்குள் சிறைவைத்து
பூஜை செய்து ஹோமப் புகைமூட்டி கற்பூரதீபம் காட்டுவதும் என்ன நியாயமோ?

‘கலசநீர் இது கங்கை நீருக்கு சமம் ..முதலில் வீடு முழுக்க தெளிச்சிட்டுவரேன்” என்று பூஜை செய்யவந்த பூசாரி வெள்ளி சொம்பிலிருந்த நீரை மாவிலைகொண்டு மரச்சுவரில் மரத்தரையில் என்று எல்லா இடத்திலும் தெளிக்க ஆரம்பிக்கிறார்.

எனக்கு சிரிப்பாய் வருகிறது. உயிர்ப்பு உள்ள மரங்களின் வேருக்கு நீர்விடாமல் செத்தமரங்களைத்தட்டி எழுப்ப முயல்கிறாரே என்று.

சில கணங்கள்தான் என்னால் அந்தவீட்டிற்குள் நிற்கவே முடியவில்லை.
மூச்சுமுட்டியது,வேகமாக வெளியே வந்துவிட்டேன்.

வெட்டவெளியில் நேற்று என்பது அழிந்துபோய் இன்று நின்று சிரிக்கிறது.காற்று துடைத்துவிட தினமும் தன்னைப்புதுப்பித்துக்கொள்ளும் புறவெளியில்தான் ஜீவன் உயிர்த்துக்கிடக்கிறது.

விறகுக்கட்டைகளை

ஏற்றிக்கொண்டு

விரைந்துவரும் வாகனத்தின்

வாசகம்....

’மரம் வளர்ப்போம்’

என்னைப்போல் ஒரு கவிஞன் எழுதிய கவிதையை வாசித்த நினைவு வருகிறது.

******************************************************************************************The United Nations General Assembly declared 2011 as the International Year of Forest
மேலும் படிக்க... "உயிர்ப்பு."

Friday, October 14, 2011

மதுரை மீனாட்சி தாயே!


அன்னை பராசக்தி
சின்னக்கனலெனவே
என்னுள்ளே உறைந்திருக்க
பின்னும் நான் பித்தாகி
மின்னுவதற்கெல்லாம்மயங்கி
எத்தனையோ ஏற்றங்களை
மொத்தமாய்த்தொலைத்துவிட்டேன்
அன்னையவள் பிள்ளையினை
அடையாளம் காட்டியென்னை
அன்புடனேப்பழகிஅறிவுதனைவளர்த்து
முன்னைவினைதீர்த்துக்கொள்ள
முன்னேற்பாடாய் அனுப்பியதை
கண்ணதனின் ஒளி இழந்த
பின்னேதான் உணர்வேனோ?
காட்சியது விரிந்திருக்க
கானல்நீர்தேடி அலைகின்றேன்
மாட்சிமைபொருந்தியவர்களை
அலட்சியத்தில் தவறவிட்டேன்
ஆட்சிஎன்றெனக்குத் தேவையானதெல்லாம்
நிர்தாட்சிண்யமாய் பெற்றுக்கொண்டேன்
மீட்சி தேடி நான் வந்தால் மன
சாட்சி மெல்ல நகைக்கிறதே?தாயே
மீனாட்சி,எனை ஆட்டுவதும் நீயேதான்
வாட்டிவதைப்பதுவும் நீயேதான்!
காட்டி மிகமகழ்ச்சியினில்
வீழ்த்துவதும் நீயேதான்.
கூட்டுமடியார்களிடம் எனை
சேர்த்துவைத்து ,புத்திதனை
வார்த்தசிலைபோலாக்கிடுவாய்
வளர்நகரத்திருமங்கைவடிவான இளநங்கை
மதுரைமீனாட்சிதாயே
மேலும் படிக்க... "மதுரை மீனாட்சி தாயே!"

Tuesday, October 11, 2011

நினைவலைகள்.

எனது பள்ளிநாட்களில் காதல் என்கிற வார்த்தையை ஒரு தீவிரவாதம் போல நினைக்கவைத்திருந்தார்கள். அதையும் மீறி காவிரிப்படுகையிலும் கடைவாசலிலும் சிலரின் காதல் நாடகங்கள் அரங்கேறிக்கொண்டுதான் இருந்தன. ஆனால் எங்களைப்போன்ற நடுத்தரக்குடும்பத்துப்பெண்களுக்கு ஒன்று காதலிக்க நேரமிருக்காது அல்லது காதலித்துவிட்டால் அதைச்சொல்ல தைரியம் இருக்காது.

நான் முதல் ரகம். ஆனால் என் சிநேகிதி ராஜி திருவரங்கம் தெற்குவாசலில்நாட்டுமருந்துக்கடை வைத்திருந்த ஓர் இளைஞனை விரும்பிவிட்டாள். இளைஞனின் அப்பாதான் பெரும்பாலும் கடையில் இருப்பார் அவர் மதியம் சாப்பிடவீடுபோகும்போது இளைஞன்வருவான் அவன்பெயர் மதன் என்று வைத்துக்கொள்வோம்(உண்மைப்பெயரை எழுத இயலாது) மதன் வரும் நேரமாய் ராஜி கடைக்குபோய் கூந்தல்வளர்தைலம் தயாரிக்க தேவையான பொருட்களை வாங்கிவருவாள். ராஜிக்கு ஆறடிகூந்தல். மாநிறம் என்றாலும் துறுதுறுவென்றிருப்பாள். கட்டுப்பாடான் குடும்பம். அப்பா இல்லை என்பதால் அவள் அம்மாவும் அண்ணனும் அவளை மிகவும் போர்த்திபோர்த்திவளர்த்தனர்.ராஜியின் அண்ணனுடன் பள்ளியில் ஒன்றாகப்படித்தவந்தான் மதன். பள்ளிப்படிப்பிற்குப்பிறகு அவன் டிபளமோ படிக்க ஆரம்பிக்க ராஜியின் அண்ணன் சென்னைகல்லூரிக்கு மேற்படிப்பு படிக்கப்போனான்.

அண்ணனைப்பார்க்க மதன் வீடுவரும்போது அவனிடம் மனதைப்பறிகொடுத்திருக்கிறாள் ராஜி. ஆனால் அதை மதனிடம் அவள் சொல்லவில்லை.ஜாதி மதத்தடைகள்! வீட்டில் சொல்லவே முடியாது. ராஜியின் அண்ணன் சென்னை போனதும் மாதம் ஒருமுறை வீடுவருவான் அப்போது மதனும் அவனைப்பார்க்க வருவான்.

மதன் தன்னைக்காதலிக்கிறானா என்று ராஜிக்குத்தெரியவில்லை ஆனால் அவனது பார்வை ஏதோ சொல்வதுபோல அவளுக்குத்தோன்றிவிட்டது. மனசுக்குள் மதனை மாதக்கணக்கில் அவள் காதலித்து கல்யாணம் செய்து குடும்பம் நடத்த திடீரென ராஜிக்கு அந்தப்பதினேழு வயதில் ( கல்லூரிக்கெல்லாம் அனுப்பவில்லை )திருமணம் நிச்சயம் செய்துவிட்டனர்.அப்போதாவது அவள் பெற்றோரிடம் சொல்லி இருக்கலாம். -- ஏன் என்னிடமே சொல்லவில்லை ராஜி.

கல்யாணமாகி ராஜி சென்னை சென்றுவிட்டாள்..முதலில் சில நாட்கள் கடிதத்தொடர்பு இருந்தது அப்புறம் அதுவும் நின்றுவிட்டது எனக்குக்கல்யாணமாகி நானும் பெங்களூர் வந்துவிட்டேன் கல்யாணத்திற்கு அவளை அழைக்கவில்லை முகவரியை எங்கோ தவறவிட்டுவிட்டேன். அவள்பிறந்தவீட்டில் எல்லோரும் அவள் அண்ணனுக்குதுபாயில் வேலை கிடைத்துவிட ஊரைவிட்டே போய்விட்டார்கள்.

இருபதுவருஷத்திற்குப்பிறகு ஒருநாள் சென்னைக்கு உறவினர்வீட்டுத்திருமணத்திற்கு சென்றபோது கல்யாணமண்டபத்தில் சற்று குட்டையாய் இருந்தாலும் களையான முகத்துடன் இருந்த அந்தப்பெண்ணின் முகத்தை எனக்கு எங்கோ பார்த்த நினைவு சட்டென் அவள் திரும்பி நிற்கவும் அந்த நீளமான பெரிய பின்னல் எனக்கு அவளை ராஜிதான் என்று உறுதி செய்ய நெருங்கினேன்.

இருவருக்கும் திகைப்பும் மகிழ்ச்சியும் பெருகின.

பிரியும்போது ஞாபகமாய் அவளது விலாசம் போன்நம்பரை வாங்கிகொண்டேன் அவள் என்னிடம் ரகசியமாய் கேட்டாள்.” நீ ஸ்ரீரங்கம் போகிறாயா இப்பவும்? எனக்குத்தான் அங்க யாருமே இல்லை கணவர் கூட்டிட்டுப்போகமாட்டேங்கிறார். கல்யாணமாகி சென்னைபோன ஒரேவருஷத்தில்கணவருக்கு வேலை மாற்றலாகி டில்லிபோனவள்தான் இந்தமாதிரி ஏதாவது கல்யாணம்னாதான் சென்னைப்பக்கம் வரேன்.என் மனசெல்லாம் ஊரிலேயே இருக்கு... “ என்றவள் கண்கலங்கினாள்.

“ஏய் என்னாச்சு?”

“ உன்கிட்ட சொல்றேன் இப்பவாவது.” என்று ஆரம்பித்தவள் நான் இங்கு ஆரம்பத்தில் எழுதியவைகளை விவரித்தாள்

, பிறகு”.நா நான் ..மதனை விரும்பினேன் ரொம்ப நேசிச்சேன்.அதை அவன்கிட்ட சொல்லமுடியல அவனும் என்னை நேசிச்சானா தெரியல...நேசிக்கறதைவிட நேசிக்கப்படற சுகம் அலாதி இல்லையா? காலம் தாழ்ந்தாலும் அந்த உணர்வு அவன்கிட்டயும் இருக்குன்னு தெரிஞ்சாபோதும். அடுத்த ஜன்மத்தில் நாங்க கண்டிப்பா இணைவோம். என் அன்பினை நீ அவனிடம் எனக்காக சொல்றியா ப்ளீஸ்? நீ மதனைப்பார்ப்பியா?” என்றாள் கெஞ்சுதலான குரலில்

“வருஷாவருஷம் ஊர் போனா அவன் கடைலதான் என் பெண்களுக்கு கூந்தல்வளர் தைலத்திற்குத்தேவையான நாட்டுமருந்துசாமான்களை வாங்கறேன் அவன் அப்போல்லாம் உன்னை கேட்பான் ராஜி எப்டி இருக்காங்கன்னு நாந்தான் ‘தொடர்பே விட்டுப்போச்சு’ என்பேன். மதன் ஊர்ல சமூக சேவைலாம் செய்றானாம். ”

“இந்த தடவை போனா சொல்றயா மதனை மனசுக்குள் ஆராதிச்சவ விஜாரிச்சான்னு?”

“கண்டிப்பா.அந்த நினைவு உனக்கு ஆறுதலாய் இருக்கும்னா தெரிஞ்சிட்டுவரேனே?’

விடைபெற்று ஊர்வந்தபிறகு மதனின் கடையின் பொருட்கள் வாங்கிய சீட்டினை எடுத்துப்பார்த்தேன் அதில் அவன் அலைபேசி எண் இருந்தது. அட பழம் நழுவிப்பாலில் இவ்வளவு சீக்கிரமாக விழுந்துவிட்டதே! சட்டென அவனை அழைத்தேன்

“மதன்.”அழைத்து அவனிடம்,”ராஜியைப்பார்த்தேன்” என்றேன்.

உடனே ஆர்வமாய்.”எங்கே எங்கேபார்த்தீங்க என் தேவதையைப்பார்த்திட்டீங்களா?” என்றவன் உடனே”ஸாரி .ராஜிக்குக்கல்யாணம் ஆகிடிச்சி.அவள் நினைவில் நான் வாழ்கிறேன் என்பதை என்னையும் அறியாம உளறிட்டேன் ஸாரி” என்றான்.

“பரவாயில்லை.சீக்கிரமே நான் ஊருக்கு வரேன் நேர்ல உங்ககிட்ட பேசணும் “ என்று சஸ்பென்சாக சொல்லி போனை வைத்துவிட்டேன்.

மதனும் ராஜியை நேசித்திருக்கிறான் இன்னமும் நேசிக்கிறான் மானசீக அன்பு இருவரையும் வாழவைத்துக்கொண்டிருக்கிறது.அதை ஒருவருக்கொருவர் தெரிந்துகொண்டு விட்டால் வருங்காலத்தில் அந்தப்பிடிப்போடு இன்னமும் உற்சாகமாய் வாழ முடியும் என்று தோன்றியது. சில நினைவுகள் மனதிற்கு பலம்!

அன்று பஸ் ஏறும்போதே மனசுக்குள் ஒரு மகிழ்ச்சி.
திருச்சியில் இறங்கி ஸ்ரீரங்கம் செல்லும் ஒன்றாம் எண் பஸ்ஸில் ஏறி காவிரிப்பாலம் கடக்கையில் ஆடி வெள்ளத்தில் காவிரி கைவீசி போய்க்கொண்டிருக்க பஸ்ஸில் எல்லோருமே சிரித்தமுகத்துடன் அமர்ந்திருந்தமாதிரிப்பட்டது.

‘இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ?’ பஸ்ஸில் எஃப் எம் கூடசூழ்நிலைக்கு ஏற்ற பாட்டினை ஒலிபரப்பியது.
ஆயிற்று பஸ் ஸ்ரீரங்கத்திற்குள் நுழைந்துவிட்டது. தேவிடாக்கீஸ் வழியாக ரங்கநகர் மெயின் பஸ் நிறுத்தம் செல்ல திரும்பியபோது சட்டென என் பார்வை பக்கவாட்டுச் சுவரிலிருந்த போஸ்டரில் பதிந்தது.


‘எங்கள் அருமைச்சகோதரன் சமூக சேவகர் ஸ்ரீரங்கம் ஆர்.மதன் அவர்கள் நேற்று இரவு மாரடைப்பில் காலமானார் அவருக்கு கண்ணீர் அஞ்சலி தெரிவிக்கிறோம்.’என்று மதனின் போட்டோவைப்போட்டு கீழே இரு கண்களைவரைந்து அதிலிருந்து கண்ணீர் வழிகிறமாதிரி வெளியிட்டிருந்தது.

’ஐயோ’

தூக்கிவாரிப்போட எழுந்துவிட்டேன்.

பஸ் நின்றதும் கீழே இறங்கினேன் ஸ்ரீரங்கம் பிரதான சாலை எங்கும் அந்த நோட்டீஸ்தான் .கண்ணில் பட்டது.

நடைப்பிணமாய் ஊர் திரும்பினேன்...! இன்னும் நான் இந்தவிஷயத்தை ராஜிக்குத்தெரிவிக்கவே இல்லை.
மேலும் படிக்க... "நினைவலைகள்."

Friday, October 07, 2011

பாத கமலங்கள் காணீரோ!

//சீதக் கடலுள் அமுதன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
பாத கமலங்கள் காணீரோ
பவள வாயீர்வந்து காணீரோ!//

பெரியாழ்வாரின் பாடலோடு உடுப்பிக்குள் செல்வோம்!








ஒருத்தி (தேவகி)மகனாய்ப்பிறந்து ஓரிரவில் ஒருத்தி(யசோதை) மகனாய் வளர்ந்தவர் கிருஷ்ணர்.

கிருஷ்ணனின் பாலபருவத்தை, தான் அனுபவிக்கவில்லை என்னும் வருத்தம் தேவகிக்கு இருந்தது. ஒரு முறை கிருஷ்ணரிடம் இதை தெரிவித்ததும் கிருஷ்ணரும் தனது பாலலீலைகளை தாய்க்கு நடத்திக்காட்டினாராம். தேவகியோடு ருக்மணியும் இதைக்கண்டு களித்தாள்.

உடனே ருக்மணீதேவி க்ருஷ்ணரிடம் பின்வருமாறுவேண்டினாள்.
‘ஹேப்ரபோ! தங்களின் குழ்ந்தைவடிவமும் லீலைகளும் எனது உள்ளத்தைக் கொள்ளைகொண்டன அந்த பாலக்ருஷ்ணர் மனதில் பதிந்துவிட்டது. எனக்கு அந்த வடிவம் விக்கிரஹமாக வேண்டும். விக்கிரஹத்தை எனது பூஜை அறையில் வைத்துக் கொள்ளவிரும்புகிறேன் அதை தாங்கள் உருவாக்கித் தரவேண்டும் ”

க்ருஷ்ணன் உடனே தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவை அழைத்தார் ஸாளக்ராம் சிலைவடிவம் அமைத்துத்தரச்சொன்னார் .அவர் வடித்த ஸாள்க்ராம சிலையை-விக்ரஹத்தை ருக்மணிதேவி தினமும்பூஜித்து வந்தாள் அந்த தெய்வீக சிறப்புவாய்ந்த விக்ரஹம் உடுப்பிக்கு எழுந்தருளியது மிகவும ஆச்சர்யமானதும் நமக்கு பக்திப்பரவசமூட்டும் நிகழ்வுமாகும்!
.
க்ருஷ்ணர் தனது இறுதிக்காலம்வரை த்வாரகையில் வசித்து வந்தார் அதாவது பழையத்வாரகை(த்ற்சமயம் குஜராத்திலுள்ள துவாரகா)
க்ருஷ்ணரின் சங்கல்பத்தால் பழைய த்வாரகை நீரில் மூழ்கியபோது ருக்மணி பூஜைசெய்து வந்த க்ருஷ்ணவிக்ரஹமும் மூழ்கிப் போய்விட்டது .கோபி என்று சொல்லப்படும் ஒருவித களிமண்ணால் அதுமுழுவதும் மூடப்பட்டு காலப் போக்கில் பாறைபோல இறுகி சமுத்திரக் கரையில் ஒதுங்கியது.

பலநூற்றாண்டுகள் கழித்து கப்பலோட்டி ஒருவனுக்கு இந்தப்பாறை கண்ணில்பட்டது. தனது கப்பலில் பாரத்தை சமநிலையில் வைக்க அதை உபயோகப்படுத்தி வந்தான்,

ஒருமுறை அவனது கப்பல் தென்னிந்தியாவை நோக்கிப் பயணம் செய்தபோது அரபிக்கடலில் உடுப்பிக்கு அருகில் உள்ள பண்டேஸ்வரா(மேற்குக்கடற்கரை) பகக்ம் கடும்புயலில் சிக்கியது மால்பார் என்னும் இடத்தில் கடலில் தத்தளித்துக்கொண்டு இருந்தது.

அப்போது தனது நித்ய அனுஷ்டானங்களை செய்வதற்காக வட பந்தேஸ்வரர் என்ற கடற்கரையைச் சென்றடைந்த மத்வாச்சாரியார் கடலில் ஒரு கப்பல் தடுமாறுவதைப்பார்த்தார். அந்தக்கடும்புயலைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு ஸ்ரீமன் நாராயணனை பிரார்த்தனை செய்தபடி தனது மேல் அங்கவஸ்த்திரத்தை எடுத்துக் கப்பல் இருக்கும் திசை மீதுவீசினார்.

என்ன ஆச்சர்யம் !வேகமாக விசீக் கொண்டிருந்த அந்தப்புயல் வெள்ளை அங்கவஸ்திரத்தைக்கண்டதும் சட்டென ஓய்ந்துஅடங்கியது புயலில் மூழ்க இருந்த அந்தக்கப்பல் கரைக்கு வந்து ஒதுங்கியது.

அந்தக் கப்பலோட்டி கரைக்கு ஒடி வந்து மத்வாச்சாரியாரின் காலில் வீழ்ந்து வணங்கினான்.

“ஐயா! உங்களுக்கு நான் எப்படி நன்றி உரைப்பேன்? பெரும் ஆபத்திலிருந்து கப்பலைக்காப்பாறிவிட்டீர்கள். ஐயா இதற்கு அன்பளிப்பாக இந்தக் கபலிலுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள்” என்றான்.

மத்வர் புன்னகை தவழ தன் மறுப்பைத்தெரிவித்தார். ஆனால் அந்தக்கணம் கப்பலில் இருந்த அந்தகோபிப்பாறையை நோக்கினார் .ஞானத்ருஷ்டியில் அவருக்கு அதில் ஒளி(ர்)ந்திருந்த க்ருஷ்ணர் தெரியவும் கப்பலோட்டியிடம் அதைமட்டும் கேட்டுப் பெற்றுகொண்டார் அதனை பக்தியுடன் சிரசில் சுமந்துகொண்டு நாராயண ஸ்மரணத்துடன் உடுப்பி நோக்கி நடந்துவந்தார்(அந்தநேரம் அவர் பக்திபரவசத்தில் பாடிய பாடல்களை த்வாத்சஸ ஸ்தோத்திரம் என்றுவழங்கப்படுகிறது)

கப்பலோட்டியிடமிருந்து பெற்றுக்கொண்டு வந்த அந்த வெள்ளைமண்பாறையை திருக்குளத்தில் நீராட்டியபோது க்ருஷ்ணரின் சாள்க்ராம சிலை வெளிப்பட மத்வர் பரவசத்துடன் விழுந்து வணங்கினார். அந்ததிருக்குளம் மத்வசரோவர் என்று பிரசித்தி அடைந்தது, அந்தக்குளத்தின் தீர்த்தம் தான் க்ருஷ்ண பகவானின் ஆராதனைக்கும் அபிஷேகத்திற்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

சிலைக்கு நீராட்டியதும் அதுமேலும் ஸாந்நித்யம் பெற்று பிரகாசித்தது. உடனே முறைப்படி க்ருஷ்ணமடத்தில் பிரதிஷ்டை செய்தார். அதுதான் உடுப்பி க்ருஷ்ணன்கோயில் என்று புகழ்பெற்று விளங்குகிறது.

பாலக்ருஷ்ணன் வடிவில் வலதுகையில்மத்தும் இடதுகையில் கோலும் ஏந்திக்கொண்டு உடுப்பியில் க்ருஷ்ணன் பார்ப்போரை பரவசம் அடையச்செய்கிறான்!

இந்தக்கிருஷ்ணரை பூஜை செய்யும் உரிமை ஸ்ரீமத்வாச்சாரியாரின் பரம்பரையில் வந்த அவரது சிஷ்யர்களுக்கு மட்டும்தான் அளிக்கப்படுகிறது. சிறுவயதிலேயே தீஷை பெற்று சந்நியாசம் மேற்கொண்ட அவர்கள் பாலஸந்நியாசபட்டர்கள் என்று விளங்குகிறார்கள்.ஸ்ரீ கிருஷ்ணன் சந்நிதியில் மத்வாச்சாரியாரால் ஏற்றப்பட்ட ஒரு நெய் தீபம் (பிரதிஷ்டைதினம்) இன்றும் அணையாமல் பாதுகாக்கப்படுகிறது.இங்கு பூஜைக்கு உபயோகப்படும் மணி காஷ்ட(மரம்) பீடம் வெள்ளி அஷயபாத்திரம் மேலும் தீபங்கள் முதலியன மத்வாச்சாரியார் காலத்தவை அவரது கரங்களால் புனிதமடைந்தவை.



தென்னகத்து மதுரா எனப்படும் உடுப்பி என்றதுமே நம் நினைவிற்கு வருபவர்
கிருஷ்ணபக்தர் கனகதாசர்.

கனகதாசரின் காலம் 15ம் நூற்றாண்டு (1506 - 1609). என்கிறார்கள். , செல்வச் செழிப்புடன் விளங்கிய விஜயநகரப் பேரரசு மறையத் தொடங்கியிருந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்.

கனகதாசர் குருபர் குலத்தினராக இருந்தும் இளம்வயதிலேயே கல்வி, கேள்விகளில் சிறந்தும், கவி பாடும் திறன் பெற்றவராகவும் இருந்தார். ஹரிபக்திசாரம், நரசிம்ஹஸ்தவம் ஆகிய துதிப்பாடல்களும், ராமதான்யசரித்ரே , நளசரித்ரே, மோகனதரங்கிணி ஆகிய காவியங்களும், நூற்றுக் கணக்கான தனிப் பாடல்களும் அவர் இயற்றியவையாகும்.

. கனகதாசர் உடுப்பிக்குச் சென்று அங்குள்ள கிருஷ்ணர் கோயிலில் நுழைந்து தரிசனம் செய்ய விரும்பினார். அதனை சில பிராமண பூசாரிகள் தடுத்தனர். கோயிலின் பின்புற வாயிலுக்குச் சென்று அங்கிருந்தே மனமுருகிப் பாட ஆரம்பித்தார். அவரது பக்திக்கு இரங்கினார் பரந்தாமன். அவருக்கும் கிருஷ்ண விக்கிரகத்திற்கும் இடையே இருந்த சுவரில் பிளவு உண்டானது. அதில் ஜன்னல் அளவு பெரிய இடைவெளி தோன்றியது. அதே நேரத்தில் கிருஷ்ண விக்கிரமும் அரைவட்டமாகத் திரும்பி அந்த துவாரத்தின் வழியே தாசருக்குத் தரிசனம் தந்தது!. .




பகவான் தரிசனம் தந்து விட்டார். ஆனால் தன் வாழ்நாளின் கடைசிவரை கனகதாசர் கோயிலுக்குள் நுழையவே இல்லை. கன்னட நந்தனார் என்று இவரைக்கூறினாலும் நந்தனார் போன்றோ, திருப்பாணாழ்வார் போன்றோ அவர் கடைநிலைச் சாதியினர் கூட இல்லை. போர்வீரராக ‘நாயக்கர்’ என்ற பட்டத்துடன் வாழ்ந்திருக்கிறார். இருந்தாலும் அவர் உடுப்பி கிருஷ்ணர் கோயிலுக்குள் அனுமதிக்கப் படவில்லை. சாதியக் கட்டுப் பாடுகள் அந்த நாளில் மிகவும் ஆளுமையாக இருந்திருக்கின்றன என்று இதனால் தெரியவருகிறது.




இன்றும் உடுப்பி கோயிலின் வாயிலில் ‘கனகன கிண்டி’ (கனகனது சாளரம்) என்று ஒரு ஜன்னல் இருக்கிறது. சம்பிரதாயத்தின்படி கிழக்கு நோக்கி வீற்றிருக்காமல், கிருஷ்ண விக்கிரம் மேற்கு நோக்கி இருக்கிறது நாமும் கனகதாசர் வழிபட்ட அந்த ஜன்னல்துவாரத்தின் வழியேதான் கிருஷ்ணரைக்காணவேண்டும்.ஆண்டிற்கு ஒருமுறை விஜயதசமி உற்சவத்தின்போது கிழக்குநுழைவாயில் திறக்கப்படும்.அப்படிக் கதவுதிறந்ததும் முதலில் புதிதாக விளைந்த நெல் போன்ற தானியங்கள் இந்த வாயில்வழியாக சந்நிதிக்கு உள்ளே செல்லப்படுகிறது
.

கனகதாசருக்கு கர்நாடக சங்கீதத்தின் இசையமைப்பு பற்றிய அடிப்படை ஞானம் இருந்தது. கிராமிய இசைவாத்தியமான எளிய தம்புராவை மீட்டிப் பாடும் வகையில் எளிய சொற்களிலேயே அவரது பெரும்பாலான பாடல்கள் அமைந்துள்ளன. பல பாடல்கள் தத்துவார்த்தமானவவை.
.
உடுப்பியில் அவர் நின்று பாடிய வீதியில் கோயிலுக்கு வெளியே அவருக்கு ஒரு சிறு நினைவு மண்டபம் உள்ளது. அதில் கனகதாசரின் திருவுருவச் சிலைக்கு மாலை போட்டு வைத்திருக்கிறார்கள். கோயிலுக்குள் அவரது சிலையோ திருவுருவப் படமோ எதுவும் இல்லை. ,ஆண்டுதோறும் நவம்பர் 24ம்தேதியன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடுகிறார்கள் “கனகதாஸ ஜயந்தி” என்று கொண்டாடுகிறார்கள்.. கனகதாசரின் பிறந்தநாள் மட்டுமல்ல பசவண்ணா எனும் கன்னடப்புலவரின் பிறந்தநாளுக்கும் கர்நாடகத்தில் மாநில அரசு விடுமுறை. அளிக்கிறது. கர்நாடக வீரசைவ சமயப் பிரிவின் குருநாதர் தான். பசவண்ணர்
அடித்தட்டு மக்களின் சமய, ஆன்மீகக் குரலாக எழுந்த இரு பெரும் சைவ, வைணவப் பெரியார்களின் பிறந்த நாட்களை அரசு விடுமுறையாக அறிவித்ததோடு, அவர்களின் புனித நினைவைப் போற்றி, அவர்களது மனிதநேய ஒருமைப்பாட்டுச் சிந்தனைகளைப் பரப்பும் வகையில் பல நிகழ்ச்சிகளையும் நடத்த மாநில அரசு ஆதரவு தருகிறது.

ஆலயவளாகத்தில் ஐம்பத்திற்கும் மேல் கறவைமாடுகள் கட்டப்பட்டுள்ளன.

உடுப்பியில் எட்டுமடங்கள் உள்ளன. பல உன்னத ஆசாரியார்களின் சிஷ்யபரம்பரையினர் அவைகளை இன்னமும் சிரத்தையுடன் பாதுகாத்துவருகின்றனர். இந்த எட்டுமடங்களைத்தவிரவும் மேலும் பலமடங்கள் தினந்தோறும் அன்னதானம் செய்துவருகின்றன. உடுப்பி சென்றால் நாம் மடங்களில் தங்கிக்கொள்ளலாம். பரந்துவிரிந்த விசாலமான அறைகளும் நடுமுற்றமும் அதில் சிறுகோவில்மண்டபமும் அத்துடன் பழையகாலபாணியில் கட்டப்பட்ட மரத்தூண்களும் நிலைகளுமாய் ஒவ்வொரு மடமும் நம்மை பரவசப்படுத்தும். அரண்மனைவளாகம்போல காணப்படும். ரதத்தெரு(தேரடிவீதி) சென்று காலாறநடக்க்லாம்..ஊரெங்கும் கிருஷ்ணவாசனையை நுகரலாம்!

கிருஷ்ணனின் திருவிடத்திற்கு அருகில் ஏறக்குறைய ஐந்துகிலோமீட்டர் அருகே அரபிக்கடலின் அழகிய மால்பே கடற்கரை அமைந்துள்ளது. கடல்நடுவே செயிண்ட்மேரீஸ் தீவு இருக்கிறது.கையில் பணம் அதிகமிருந்தால் அங்கே போய் ஓர் இரவு இளைப்பாறலாம்!

உடுப்பி ஸ்பெஷல் பல உண்டு அதில் பத்ர அடை என்பது அங்கேதான் அதிகம் கிடைக்கும்!. சேப்ப இலையைசுருட்டி தயாரிக்கும் சிற்றுண்டி இது,சுவையறிந்தால் விடமுடியாது!

ஆனாலும் உடுப்பிகோயிலின் சின்னக்கண்ணனின் மந்திரதொனி அழைப்பும், அந்தக்கள்ளச்சிரிப்பும் ஊரைவிட்டு நகர்ந்தபின்னும் நம் உள்ளத்திலேயே நின்றுகொண்டிருக்கும்!



த்ருடபக்தி நின்னல்லி பேடி
நான் அடிகெரகுவேனய்ய அனுதின ஹாடி
கடெகண்ணிலே நன்ன நோடி
பிடுவே கொடு நின்ன த்யானவ மனசுசி மாடி (தாஸன)


எப்போதும் மாறாதிருக்கும் திடமான பக்தியை உன்னிடத்தில் வேண்டி,
நான் உன் பாதத்தில் தினமும் விழுந்து உன் நாமத்தை பாடிக்கொடிருப்பேன்.
உன் கடைக்கண்ணால் என்னை பார்த்து
நான் என்றென்றும் உன்னை தூய மனதோடு நினைத்துக்கொண்டிருக்குமாறு அருள்புரிவாய்

(புரந்தரதாசர்)
மேலும் படிக்க... "பாத கமலங்கள் காணீரோ!"

Thursday, October 06, 2011

அரங்கன் அந்தாதி!

விஜயதசமி தினத்தில் புதிய முயற்சிகள் வெற்றி பெறும் என்பார்கள். நீண்ட நாளாய் வலைத்தளைத்தை சற்று புதுமைப்படுத்த எண்ணி இருந்தேன் நேரமில்லாமல் போனது இன்று ஒருவழியாய் வலைப்பூவிற்கு புதியபெயரையும் சூட்டி சில மாற்றங்கள் செய்துவிட்டேன்! நல்ல நாளில் திருவரங்கன் பேரில் ஒரு அந்தாதியை இடுகிறேன்!



முன்குறிப்பு...



இந்தக் கவிதையை 5வருடம் முன்பு எழுதியதும் ஸ்ரீரங்கம்போக நேர்ந்த நாள் ஒன்றில் இதனை பேப்பரில் எழுதிக்கொண்டுபோய் திருவரங்கன் சந்நிதி உண்டியலில் போட்டுவிட்டுவந்துவிட்டேன் எனது காணிக்கையென அரங்கனுக்கு. (பாவம் அரங்கன்!) பிறகு இப்போது இதனை இன்று இங்கு இடத்தோன்றவும் இடுகிறேன்.. சிலபிழைகள் தவறுகள் இருக்கக்கூடும் .அதற்கு முதலிலேயே மன்னிப்பு!






அரங்கன் அந்தாதி

**********************************



ஷைலஜா(திருவரங்கப்ரியா))

காப்பு.
அகிலாண்ட நாயகியாம், அன்னை அபிராமியாம்,
மஹிஷாஷ§ரனை வென்ற மாமங்கை மாரியாம்,
முகில் வண்ணன் முகுந்தனவனுக்கு முத்தான சகோதரியாம்,
சகித்தென்னை யாளும் அவள் தாளடியே காப்பு.

அந்தாதி.

அரங்கமதில் துயில் கொள்ளும்
அன்பு நிறை அண்ணல்,
இரங்கி நிற்கும் பக்தருக்கு
இசைந்தருளும் வள்ளல்.
உறங்குவது போலிருக்குமவன்
உள்ளமதில் விழிப்பு,
அறங்களை யாளுமவன் அறிந்திடுவான்
அண்டத்தின் கணிப்பு. (1)


புகல் என்று வருவோர்க்குப்
புன்னகையோடு தருவான்,
இகழ்வாரையும், இன்னல் புரிவாரையும்
இனிமையோடு ஏற்பான்.
பாம்பணையில் பள்ளி கொள்ளும்
பரந்தாமன் அவன் தான்.
நாம் வணங்கும் நாரணன்,
நலம் தரும் திரு அரங்கனே.(2)



கன்னங்கரு மேனி அழகன்,
கார்முகில் வண்ணன்.
எண்ணும் பொழுதிலேயே ஏற்று
ஏராளமாய் வழங்கும் மன்னன்.
உயர்வான ஆழ்வார்கள்
உளமாறத் துதித்தக் கண்ணன்
பெயர் பலகொண்டானை
நினைக்கையிலே உளம் உருகுமே.(3)

உருகும் பெரும் பனி போன்றது
உத்தமன் அவன் உள்ளம்.
பெருகிவரும் திருவருள்
அதுவே பேரானந்த வெள்ளம்.
நாள் தோறும் நாரணனை
நாம் வணங்கும் போதில்
வாள் கொண்டு வெட்டியது போல்
வினை நீங்கிடுமே கடிதிலே. (4)

கடிதில் விரைந்து அன்று
கஜேந்திரனைக் காத்தவன்.
சடுதியில் வந்து நம்மைச்
சக்கரம் ஏந்திக் காப்பவன்.
தாயினும் மேலான தாமோதரன்
தயா சாகரன்
ஆயிரம் நாமங்கள் கொண்ட
அராவமுதன் அரங்கனே(5)



அரங்கனவன் உறங்குமிடம்
அனந்தனது திருமேனி
அரவரசன் தன் சிரந்தூக்கி
அண்ணலைக் காப்பான் பேணி
திருவடியும், திருக்கரமும்
தெய்வத் திருமேனி எங்கும்
ஒரு பொழுதும் விட்டகலாத
அரவின் புகழ் தங்குமே.(6)



தங்கும் படி யாவரையும்
தன்னகத்தேக் கொள்வான்
பொங்கும் சூழ் புனலாம்
பொன்னியையும் கொள்வான்
ஆரம் போல் காவிரிப் பெண்
அழகிய மணவாளனுக்கு
தாரமாம் திருமாமகள் அவளும்
அருள் தரப் பார்ப்பதில்லை கணக்கே(7)



கணக்கில் என்றும் அடங்காதது
அரஙகனைக் காண வரும் கூட்டம்
வணங்கும் தன் அடியார்களை
வாழ வைப்பதே அவன் நாட்டம்
அவனன்றி ஓரணுவும் அசையாது
அவனியில் காண்
கவலைகள் பறந்து போகும்
கார்வண்ணன் பெயரில் தானே!(8)



தான் எனும் அகந்தை நீக்கி
தாமோதரன் தாள் சேர்வோம்
ஊன் எடுத்த பயன் தீர
உத்தமன் புகழ் பாடுவோம்
அரஙகமதில் குடிகொண்ட
அண்ணலைத்தேடி ஒடுவோம்
தரணியெல்லாம் வாழ வைக்கும்
ரங்கராஜனையே நாடுவோமே.(9)



நாடுவோம் என்றும் நாரணன் பதம்
நல்லன எல்லாம் தரும்
பாடுவோம் பரந்தாமன் புகழ்
பக்தியும் பணிவும் வரும்.
குறையென்று ஏதுமில்லை
அன்று குன்றேந்தியவன் பாதம் சரண்
மறை புகழும் மாதவனின் அருளிருக்க
மனதிற்கு அது அரணே.(10)



அரண்மனையினும் பெரியது அகிலம் காக்கும்
அரங்கனவன் திருக்கோயில்.
திரண்டு வரும் திருமால் அடியார்கள்
திருவருள் பெற நிற்பதுமதன் வாயில்
நல்லெண்ணம்,நற் செயலில் ,தெய்வமது
தேடி வரும் நம் அந்தரங்கம்
பலம் அதுதான் பற்றிக் கொண்டு
பாடிச் செல்வோம் திருவரங்கமே!(11)








--
மேலும் படிக்க... "அரங்கன் அந்தாதி!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.